”இன்னிக்கு நாப்கின் கேட்பீங்க..நாளைக்கு ஆணுறை கேட்பீங்க..” : அதிர்ச்சி தந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ஆணவப்பேச்சு
ஹர்ஜோத் கவுர் பம்ஹ்ரா என்பவர் ஒரு நிகழ்வின் போது, பள்ளி மாணவி ஒருவர் அரசாங்கம் அத்தியாவசியங்களை கட்டணமில்லாமல் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது
மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் எந்த ஒரு அரசும் மக்களுக்கான கட்டணமில்லா திட்டங்களை வழங்குகிறது. அதனால் அவை இலவசத் திட்டங்கள் என்பது பொருந்தாது. அந்த வகையில் அண்மையில் பீகார் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவரின் விமர்சனம் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பீகாரின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பம்ஹ்ரா என்பவர் ஒரு நிகழ்வின் போது, பள்ளி மாணவி ஒருவர் அரசாங்கம் அத்தியாவசியங்களை கட்டணமில்லாமல் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அதிகாரி கேலிக்குரிய பதில்களைக் கூறியதாக செய்தி வெளியானது. பீகாரில் சானிட்டரி நாப்கின்கள் 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகி வரும் ஒரு வீடியோவின் படி, பள்ளி மாணவர்கள் சிலர் அந்த ஐஏஎஸ் அதிகாரியுடன் உரையாடுகின்றனர். அவர்களில் ஒரு சிறுமி, "பள்ளி சீருடை போன்ற அனைத்தையும் அரசாங்கம் எங்களுக்கு வழங்குகிறது. அரசாங்கம் எங்களுக்கு 20-30 ரூபாய்க்கு கிடைக்கும் சானிட்டரி நாப்கின்களை கட்டணமில்லாமல் வழங்க முடியுமா?" எனக் கேட்டார்.அவரது கேள்விக்கு பார்வையாளர்களில் அமர்ந்திருந்த மாணவர்கள் கைதட்டினர். அதற்குப் பிறகு பதிலளித்த பம்ஹ்ரா, "கைதட்டுபவர்களே, இது போன்ற கோரிக்கைகளுக்கு முடிவு உண்டா என்று சொல்லுங்கள்? நாளை அரசாங்கம் ஜீன்ஸ் பேண்ட்டையும் கொடுக்கலாம் என்று சொல்வீர்கள். அதன் பிறகு ஏன் சில அழகான காலணிகள் கொடுக்கக்கூடாது? எனக் கேட்பீர்கள் இறுதியில், குடும்பக் கட்டுப்பாடு என்று வரும்போது, அரசாங்கம் உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு முறைகளையும், ஆணுறைகளையும் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள். ஏன் எல்லாவற்றையும் இலவசமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?"எனக் கேட்டதாக தகவல் வெளியானது
மேலும், மக்கள் வாக்குகளால்தான் நாட்டில் அரசு உருவாகிறது என்று அந்த அதிகாரியிடம் மாணவி நினைவுபடுத்தியபோது, பாம்ரா அதற்கு பதிலடி கொடுத்து “முட்டாள்தனம்” என்றார். அவர், “இது முட்டாள்தனத்தின் உச்சம், வாக்களிக்க வேண்டாம், பான் ஜாவ் பாகிஸ்தான் ( பாகிஸ்தானைப் போல் ஆகிவிடுங்கள். நீங்கள் பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் வாக்களிக்கிறீர்களா?" என எதிர்வாதம் செய்தார்
உடனே அந்த மாணவர், “நான் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்? நான் ஒரு இந்தியன்." என்றார்.
பாம்ராவுக்கும் மாணவிக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்தது. ‘சஷக்த் பேட்டி, சம்ரித் பீகார்’ என்ற அரசு நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அவரது கருத்துக்கள் மக்களிடம் இருந்து விமர்சனத்தை பெறக்கூடும் என்பதை உணர்ந்த அந்த அதிகாரி, “அரசாங்கத்திடம் இருந்து எதையும் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த எண்ணம் தவறானது. நீங்களாகவே இதனை முன்னெடுங்கள்." என மழுப்பலாகக் கூறி வெளியேறினார் எனவும் சொல்லப்படுகிறது.
இது இங்கு முடிவடையவில்லை. மற்றொரு மாணவி தனது பள்ளியில் உள்ள பெண்கள் கழிப்பறையின் பாழடைந்த நிலை குறித்தும், சிறுவர்களும் கழிவறைக்குள் நுழைவது குறித்தும் அதிகாரியிடம் தெரிவித்தபோது, பாம்ரா, “உங்கள் அனைவருக்கும் தனித்தனி கழிப்பறைகள் உள்ளதா? நீங்கள் வெவ்வேறு இடங்களில் பல விஷயங்களைக் கேட்டால் அது எப்படி வேலை செய்யும்?"
இதற்கிடையில், பார்வையாளர் ஒருவர் குறுக்கிட்டு, ஏன் அரசாங்க திட்டங்கள் உள்ளன என்று பாம்ராவிடம் கேட்டார். அதற்கு அவர், "சிந்தனையை மாற்ற வேண்டும்" என்றார்.
தன்னுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளும் சிறுமிகளுக்கு விரிவுரை அளித்த பாம்ரா, “எதிர்காலத்தில் உங்களை எங்கு பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்களுக்காக அரசாங்கம் இதைச் செய்ய முடியாது. நீங்கள் தற்போது இருக்கும் இடத்தில் உட்கார வேண்டுமா அல்லது நான் அமர்ந்திருக்கும் பக்கத்தில் உட்கார வேண்டுமா?"
மாணவிகளிடம் ஆணுறை குறித்து பேசிய விவகாரம் விமர்சனங்களைப் பெற்றதும், தான் அந்த நோக்கத்தில் பேசவில்லை, பேச்சு திரிக்கப்பட்டது என மறுத்திருக்கிறார் ஹர்ஜோத் கவுர் பாம்ரா