(Source: ECI/ABP News/ABP Majha)
மது வாங்கிய காட்சிகள்.. பிரேக் பெடலுக்கு கீழ் வாட்டர் பாட்டில்.. திமுக எம்.எல்.ஏ மகன் மரணத்தில் புதிய தகவல்கள்..!
Koramangala Accident News: பெங்களூரு கார் விபத்து தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சமீபத்தில் பலரையும் பதறவைத்த ஒரு விபத்து பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கார் விபத்துதான். அந்த கொடூர விபத்தில் ஆடி கார் கட்டுப்பாடு இழந்து, சாலையோரத் தடுப்புகளிலும் கட்டடம் ஒன்றிலும் இடித்து மோதி நின்றதில், 20 முதல் 30 வயது வரை உட்பட்ட 7 பேர் பலியாகினர். திமுகவைச் சேர்ந்தவரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் இந்த விபத்தில் பலியானார். இஷிடா, பிந்து, தனுஷ், அக்ஷய் கோயல், ரோஹித் உள்ளிட்ட 6 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
அதிவேகமே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் உயர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சொகுசு காரை கட்டுப்படுத்த முடியாமல் போனதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கார் பயணித்த பாதைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் கார் விபத்து தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சிசிடிவி சொல்வது என்ன?
கடந்த 30-ஆம் தேதி இரவும் 8.40 மணிக்கு கோரமங்களாவில் உள்ள மதுபானக்கடைக்குள் பிந்து, இஷிதா ஆகிய இருவரும் உள்ளே செல்கின்றனர். சிறிது நேரம் கழித்து கையில் ஒரு பையுடன் அவர்கள் வெளியே வருகிறார்கள். அதனால் அவர்கள் மது வாங்கி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் விபத்தில் சிக்கிய 7 பேரும் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். பின்னர் காரை கருணா சாகரே ஓட்டியது, பல இடங்களில் அதிவேகமாக சென்றதும் தெரியவந்துள்ளது. ஒரு இடத்தில் ஃபுட் டெலிவரி செய்யும் நபரை இடிப்பது போல் சென்று அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
எங்கு சென்று வந்தனர்?
கருணா சாகரின் தோழியான பிந்துவுக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக பெங்களூருவில் விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. விருந்து நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
பிரேக்கில் சிக்கி இருந்த வாட்டர் பாட்டில்?
விபத்து நடந்த காரை ஆய்வு செய்தபோது பிரேக் பெடலுக்கும் கீழே ஒரு தண்ணீர் பாட்டில் சிக்கி இருந்துள்ளது. சில நேரங்களில் பிரேக் பெடலுக்கு கீழே தண்ணீர் பாட்டில் சிக்கிக்கொண்டால் பிரேக் அழுத்த முடியாமல் போகும். இதனால் நொடிப்பொழுதில் விபத்து ஏற்படும். அப்படி இந்த விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்லது விபத்துக்கு பிறகு தண்ணீர் பாட்டில் அப்பகுதியில் சிக்கியதா என்றும் விசாரணை நடைபெறுகிறது.
முன்னதாக, இந்த விபத்து குறித்து பேசிய சாலைப் பாதுகாப்பு இணை காவல் ஆணையர் ரவிகந்தே கௌடா, ''7 பேர் பயணித்த சொகுசு ஆடி கார் ஒன்று, வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து நள்ளிரவு சுமார் 1.45 மணிக்கு அங்கிருந்த கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முழுவதும் உடைந்து நொறுங்கியுள்ளது. காரில் பயணித்த யாருமே சீட் பெல்ட் அணியாததால், அதில் இருந்து ஏர் பேக் எதுவும் திறக்கவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவர் விபத்து நடந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த 15 நிமிடத்தில் சாலைப் பாதுகாப்பு காவல்துறையினர் கூடி, உயிருடன் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார்.