PM Modi: நாளை புதிய நாடாளுமன்றம் திறப்பு; ஒப்படைக்கப்பட்ட செங்கோல்; ஆதினங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி..!
PM Modi: நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்களைச் சந்தித்தார். பிரதமரிடம் செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்கள் அவரை ஆசிர்வதித்தனர்.
நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற 21 ஆதீனங்களைச் சந்தித்தார். பிரதமரிடம் செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்கள் அவரை ஆசிர்வதித்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம்:
டெல்லியில் 64 ஆயிரத்து 500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. வரும் 28ம் தேதியன்று அதாவது நாளை பிரதமர் மோடி இந்த கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். இதில், ஒஏ நேரத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை அறையில் 300 உறுப்பினர்களும் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீங்கள் பிரதமரிடம் செங்கோலை ஒப்படைத்ததுடன் பிரதமருக்கு ஆசீர்வாதம் வழங்கினர். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார்.
செங்கோல்
இந்த திறப்பு விழாவின் போது, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும்போது நேருவிடம் ஆங்கிலேயர்கள் கொடுத்த செங்கோலை, பிரதமர் மோடி புதிய கட்டடத்தில் வைப்பார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள் பிரதமரிடம் செங்கோலை ஒப்படைத்துள்ளனர்.
#WATCH | Delhi | Ahead of the inauguration ceremony of #NewParliamentBuilding, PM Narendra Modi meets the Adheenams at his residence and takes their blessings. The Adheenams handover the #Sengol to the Prime Minister pic.twitter.com/Vvnzhidk24
— ANI (@ANI) May 27, 2023
செங்கோல் குறித்து மத்திய அமைச்சர்
செங்கோல் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆட்சி மாற்றத்தைக் குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. செங்கோலை உருவாக்கித் தந்த நகைக்கடை உரிமையாளர்களை பிரதமர் கவுரவிப்பார். கடந்த 1978ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சியில் செங்கோல் கதையை அப்போதைய காஞ்சி மடாதிபதி மகா பெரியவர் எடுத்துக் கூறினார் என குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செங்கோல் குறித்து கூறியுள்ளதாவது, ”மவுண்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர், ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை கருதினர் என்பதற்கு ஆதாரம் இல்லை” என அவர் கூறியுள்ளார்.
உடைத்து பேசும் காங்கிரஸ்:
மேலும் அவர் "வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தின் தவறான செய்திகளுடன் புதிய நாடாளுமன்றம் புனிதப்படுத்தப்படுவதில் ஆச்சரியம் உண்டா? வரலாற்றை திரித்து எழுதும் பாஜக/ஆர்எஸ்எஸ்காரர்கள், அதிகபட்ச கூற்றுக்களை கூறி குறைந்தபட்ச ஆதாரங்களை தந்து மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர்.
மவுண்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர், ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை கருதினர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுதொடர்பான அனைத்து தகவல்களும் பொய். முழுக்க முழுக்க ஒரு சிலரின் மனதில் உற்பத்தியாகி வாட்ஸ்அப்பில் பரவி, இப்போது ஊடகங்களில் விளம்பரதாரர்கள் வழியாக பரப்பப்படுகிறது.
ராஜாஜி தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் இரண்டு சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மத்திய அரசின் தகவல் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பயன் அடைய இந்த செங்கோல் நிகழ்ச்சியை பிரதமர் மோடியும் அவரது விளம்பரதாரர்களும் பயன்படுத்தி வருகின்றனர்" என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.