New Parliament Building: இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் புதிய நாடாளுமன்றம்..! இத்தனை வசதிகளா..? அடடே..!
New Parliament Building: பழைய நாடாளுமன்றம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார்.
கடந்த 1921ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில், கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டிய நாடாளுமன்றக் கட்டடம், காலனி ஆதிக்கத்தின் சின்னமாக உள்ளதாகவும் எனவே அதற்கு மாற்றாக இந்திய கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம்(New Parliament Building) கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
பழைய நாடாளுமன்றம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். தற்போது, பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதால், வரும் 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பம்சங்கள் | New Parliament Building Features:
தரைத்தளம், தரை கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நான்கு தளங்கள் அடங்கிய புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை போற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலான கலை, கைவினைப்பொருகள், சிற்பங்கள் ஆகியவை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன. புதிய நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் வரவேற்பறை, தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் அறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் கட்டடம்:
மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் கட்டடம் அமைந்துள்ளது. மேலும், காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் இந்த கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வகையில் பிரத்யேக சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள் 384 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில், 543 மக்களவை உறுப்பினர்கள், 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளது. தற்போதைய கட்டிடத்தில் உள்ள Central hall எனப்படும் மைய மண்டபம், புதிய கட்டடத்தில் இடம்பெறவில்லை.
ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் புதிய நாடாளுமன்றம்:
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகளில், 2,000 பேர் நேரடியாகவும் 9,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டனர். இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பெரிய அரசியலமைப்பு மன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வறைகள், நூலகம், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களுக்கு என பிரத்யேக அறைகள், உணவருந்தும் அறை, மிகப் பெரிய வாகன நிறுத்துமிடம் ஆகியவை புதிய கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் எடுத்தது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நடத்த தற்போதைய கட்டிடம் பயன்படுத்தப்பட உள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் பழைய நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.