Abpnadu Explainer : சம்பளம்.. பி.எஃப் தொகை.. புதிய தொழிலாளர் சட்டங்கள்: சாதகமா? பாதகமா?
புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள்... கடந்த சில நாட்களாகவே அதிகமாக விவாதிக்ககூடிய விஷயமாக இதுதான் இருக்கிறது. காரணம் இது தொழிலாளர்களுக்கு சாதகமா, பாதகமா என்ற ஐயப்பாடுதான்.
புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள்... கடந்த சில நாட்களாகவே அதிகமாக விவாதிக்ககூடிய விஷயமாக இதுதான் இருக்கிறது. காரணம் இது தொழிலாளர்களுக்கு சாதகமா, பாதகமா என்ற ஐயப்பாடுதான்.
பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை.
புதிய சட்டத் திருத்தங்கள் பற்றி விரிவாக அலசுவோம்:
புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் 29 சட்டங்களாக 4 பிரிவுகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் 4 சட்டங்கள் ஊதியப் பிரிவின் கீழும், 9 சட்டங்கள் சமூக பாதுகாப்பு பிரிவின் கீழும், 13 சட்டங்கள் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் கீழும், எஞ்சியவை தொழில்துறை உறவுகள் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறாக வகைப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் தொழிலாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என தொழிற்சங்க தலைவர்கள் சொல்கின்றனர்.
காரணம் என்ன?
புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளின்படி ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் 50% அடிப்படை ஊதியமாகக் காட்டப்பட வேண்டும். இதனால் வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். இதனால் அவர்கள் கையில் பெறும் டேக் ஹோம் சம்பளத்தின் அளவு குறையும். ஆனால், ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பின்னர் வழங்கப்படும் பிஎஃப், பணிக்கொடை அதிகரிக்கும். இதன்படி ஊழியர்கள் தங்களின் ஊதியத்தில் 50% அடிப்படை ஊதியமாகவும் மற்ற சம்பளத்தை இதர படிகளாகவும் வாங்கினால் அது ஊழியர்களுக்கு பாதிப்பில்லையாம்.
இந்த வகையில் இந்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியது என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல், ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கதாக உள்ளது. பெண்களுக்கு அனைத்து துறையிலும் பணிபுரிய அனுமதி உண்டு. ஆனால் பணியிட பாதுகாப்பு தர வேண்டும். இரவு ஷிஃப்டில் பெண்கள் பணி செய்ய விரும்பினால் அவர்களின் சம்மதத்துடன் அனுமதிக்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணி நேரம்:
ஊழியர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஒருநாளைக்கு ஒரு ஊழியர் 8 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்பதே இப்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் புதிய சட்டத்தின்படி இது 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதேவேளையில் வாரத்தில் ஒரு ஊழியரின் மொத்த பணி நேரம் 48 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை நிறுவனம் ஒரு ஊழியரை அன்றாடம் 12 மணி நேரம் பணி செய்யச் சொன்னால் 3 நாட்கள் வார விடுப்பு கிடைக்கலாம். அதேபோல், வார இறுதி விடுமுறை வழங்கப்படாவிட்டால் 2 மாதங்களுக்குள் அதற்கான இழப்பீட்டு விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
ஓவர் டைம் விதிகளில் தெளிவில்லை:
புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் ஓவர் டைம் குறித்து சட்ட விதிகள் ஏதும் தெளிவாக உருவாக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதாவது, ஓவர் டைம் வேலை வழங்கும் முழு உரிமையும் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஓவர் டைம் கடமைகளை நிறைவேற்ற ஊதியம் வரையறுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
பிஎஃப் பங்களிப்பு:
இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களின் பிஎஃப் பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது. புதிய சட்டத்தின்படி அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். நிறுவனம் மற்றும் பணியாளரின் இருவரின் பங்களிப்பும் அதிகரிக்கும். இது நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கலாம். ஆனால் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய பலன் அதிகரிக்கும். பிஎஃப் பணத்தால் கருவூலத்தின் பலனும் அதிகரிக்கும். புதிய விதிகளின்படி க்ராஜுவிட்டி பங்குகளும் அதிகரிக்கும். க்ராஜுவிட்டி வழங்குவதற்கான குறைந்தபட்ச பணி செய்யும் ஆண்டும் நீக்கப்பட்டுள்ளது. நிரந்த ஊழியர்களுக்குக் கிடைக்கும் சமூக பாதுகாப்புப் பலன்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கும் கிடைக்கும். அனைத்துத் துறைகளிலும் பணி புரியும் ஊழியர்கள் ஈஎஸ்ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தோட்டத் தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை சாதகங்கள் பட்டியலிடப்பட்டிருந்தாலும் இவை மேலோட்டமானவை என்று கூறி சில நுணுக்கங்களை தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நல சட்டம் அறிந்தவர்கள் முன்வைக்கின்றனர்.