ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா திரும்பவும் ஆன்லைன் சென்சேஷன்.. ஏன் தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்து சரித்திர சாதனை நிகழ்த்தியவர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து சரித்திர சாதனை நிகழ்த்தியவர் நீரஜ் சோப்ரா. அவரது சாதனையை தேசமே ஒரு சுற்று கொண்டாடி முடித்துவிட்ட நிலையில், இப்போது அவர் மீண்டும் இணையத்தின் ஹாட் சென்சேஷன் ஆகியுள்ளார். இந்த முறை விளையாட்டுச் சாதனைக்காக அல்ல, விளம்பரப் படத்தில் நடித்தகைக்காக அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.
க்ரெட் (CRED) என்ற கிரெடிட் கார்டு கட்டணத்தைச் செலுத்துவதற்காக செயலிக்கான விளம்பரம் அது. ஏற்கெனவே இந்த ஆன்லைன் செயலி 'இந்திராநகர் கார் குண்டா' (Indiranagar ka gunda) என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடைக் கொண்டு எடுத்த விளம்பரப் படமும் படு பிரபலமானது. தற்போது, நீரஜ் சோப்ராவை வைத்துப் புதிதாக விளம்பரம் ஒன்றை எடுத்துள்ளது. இந்த விளம்பரப் படத்தில் நீரஜ் சோப்ராவின் தோற்றம் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதில் அவர் ஃபேனாக, பத்திரிகை நிருபராக என பல தோற்றங்களில் வருகிறார். நீரஜ் சோப்ரா இந்த விளம்பரப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 360 டிகிரி மார்க்கெட்டிங் என்று தலைப்பிட்டுள்ளார்.
ரூ.10 கோடிக்கு ஏலம்:
நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி, 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டதால் இரு தினங்களுக்கு முன்னர் நீரஜ் சோப்ராவின் பெயர் இணையத்தில் பேசுபொருளானது. பிரதமர் நரேந்திர மோடி தனக்குக் கிடைக்கும் பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை இ ஆக்ஷன் (E Auction) முறையில் ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் 7-ஆம் தேதி வரை நடைபெறும் ஏலத்தில் பிரதமர் தனக்குக் கிடைத்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள் அளித்த ஈட்டி, பாக்சிங் கையுறை உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டுள்ளார். பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று, கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்துக்கு உதவுமாறு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி, 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது முதல் சமூக வலைதளங்களிலும் நீரஜ் சோப்ராவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் நீரஜ் சோப்ராவின் சமூக வலைதள மதிப்பு 428 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நீரஜ் சோப்ராவை பல்வேறு முன்னணி பிராண்ட்களும் தங்களுடைய தூதுரவாக நீரஜ் சோப்ராவை ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. சமூக வலைதளத்தில் ஒரு செலிப்ரிட்டி எவ்வளவு ஃபாலோயர் வைத்துள்ளாரோ அதன் அடிப்படையில் அவர் தனக்கான சம்பளத்தை விளம்பர உலகத்தில் அதிகரித்துக் கொள்ளலாம். நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு விளம்பரத்துக்கு ரூ.3 கோடி வாங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா?