Sharad Pawar: ’ஊழல் கட்சி’ என விமர்சித்த அஜித்பவாரை இணைத்துக்கொண்டது ஏன்? பாஜகவிற்கு சரத்பவார் கேள்வி
ஊழல் கட்சி என விமர்சித்த அஜித்பவாரை தங்களுடன் இணைத்துக்கொண்டது ஏன்? என்று பா.ஜ.க.விற்கு சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய சரத்பவார் செயல் தலைவராக தனது மகள் சுப்ரியா சூலே-வை நியமித்தார். மேலும், பிரபுல் படேலையும் நியமித்தார். இது அக்கட்சியின் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மகாராஷ்ட்ராவில் பரபரப்பு:
இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுடன் அஜித்பவார் கூட்டணி அமைத்துக்கொண்டார். இது மகாராஷ்ட்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அஜித்பவாரின் இந்த செயல் சரத்பவாருக்கும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கும், கட்சிக்கும் அஜித்பவார் உரிமை கோரினர். இந்த சூழலிலே, இன்று சரத்பவார் தலைமையிலும், அஜித்பவார் தலைமையிலும் அவரவர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தனித்தனியே மும்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இணைத்துக்கொண்டது ஏன்?
மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி அங்கு பிளவுபட்டுள்ள நிலையில், முன்னாள் மாநில முதலமைச்சரும், மூத்த தலைவருமான சரத்பவார் ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது, “ எங்கள் முன் உள்ள தடைகளை தாண்டி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். நமக்கு முன் தடைகள் இருந்தாலும் நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஏதேனும் பிரச்சினை இருந்தால் அஜித்பவார் என்னிடம் பேசியிருக்க வேண்டும். அதை நானே தீர்த்து வைத்திருப்பேன். எங்களுக்கு பதவி மீது, அதிகாரத்திற்கு மீது ஆசை இல்லை. மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம். ஊழல் கட்சி என விமர்சித்த நிலையில் அஜித்பவாரை பா.ஜ.க. இணைத்துக்கொண்டது ஏன்?” கேள்வி எழுப்பினார்.
தொண்டர்கள் வேதனை:
மகாராஷ்ட்ராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், 54 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றது, தற்போது 54 எம்.எல்.ஏ.க்களுடன் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 29 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று அஜித்பவார் நடத்திய கூட்டத்தில் 29 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாகவும், சரத்பவார் நடத்திய கூட்டத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருவரும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: "என்ன ஆனாலும் அவரை விடமாட்டோம்…" - பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி குறித்து ம.பி. முதல்வர்!
மேலும் படிக்க: அஜித் பவாருக்கு பதவி கொடுக்காதது ஏன்..? உண்மையை போட்டு உடைத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்..!