கடல் மட்டத்தில் இருந்து 19ஆயிரம் அடி உயரம்.. 'உம்லிங் லா' சாலை கதை தெரியுமா?
உலகின் மிக உயரமான மோட்டார் சாலையான உம்லிங் லா கணவாயில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. இது கடந்த 2017ஆம் ஆண்டு Border Roads Organisation என்ற அரசு அமைப்பால் திறக்கப்பட்டது.
உலகின் மிக உயரமான மோட்டார் சாலையான உம்லிங் லா கணவாயில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்தச் சாலை கடந்த 2017ஆம் ஆண்டு Border Roads Organisation என்ற அரசு அமைப்பால் திறக்கப்பட்டது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது உம்லிங் லா கணவாய். இது உலகிலேயே மிக உயரமான பயன்படுத்தக்கூடிய மோட்டார் சாலையாக அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 19 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த சாலை, உத்தராகாண்டின் மனா கணவாய் சாலையையும், பொலிவியா நாட்டின் உடுருன்சு சாலையையும் விட அதிக உயரத்தில் அமைந்திருக்கிறது.
சாதாரண பயணி அல்லது வாகன ஓட்டி ஒருவரால் ground clearance அதிகம் கொண்டிருக்கும் உயர் ரக SUV கார் அல்லது அதிகத் திறன் கொண்ட சாதாரண மோட்டார் பைக் ஆகியவற்றைக் கொண்டு சாலையின் தரத்தைப் பொருட்படுத்தாமல், வாகனத்தை மட்டும் இயக்க முடியும் என்றால் அது பயன்படுத்தக்கூடிய மோட்டார் சாலை என்று கருதப்படும்.
உம்லிங் லா கணவாய் இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ளது. ஆதலால் இங்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் அனுமதி பெற வேண்டும். இது லடாக் பகுதியின் சிசும்லே, டெம்சாக் ஆகிய இரண்டு மலைக் கிராமங்களை இணைக்கும் சாலை. 54 கிலோமீட்டர் தொலைவுள்ள இந்தச் சாலையை Border Roads Organisation 6 ஆண்டுகளில் கட்டி முடித்தது. Project Himank என்ற திட்டத்தின் கீழ், இந்தச் சாலை கட்டப்பட்டது. இந்தச் சாலையின் அருகில் ஹம்லே என்ற கிராமம் பிரசித்தி பெற்றது. உம்லிங் லா கணவாய் சாலை அமைந்திருக்கும் இடம், நேபாளில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் உயரமான சாலையை விட அதிக உயரத்தில் அமைந்திருப்பது Border Roads Organisation அமைப்பின் கட்டிடத் திறனை உணர்த்துவதாக இருக்கிறது.
ஹம்லே மிகக் குளிரான பனிப் பாலைவானத்திற்கு மட்டுமின்றி, இங்கிருக்கும் பழைய பௌத்த மடாலயத்திற்காகவும் சுற்றுலா தளமாகக் கருதப்படுகிறது. உலகின் இரண்டாவது மிக உயரமான டெலஸ்கோப் மையம் இங்கு அமைந்துள்ளது.
மிக உயரத்தில் அழகான காட்சியமைப்பைக் கொண்ட இடமாக இருந்தாலும், உம்லிங் லா கணவாய் சாலையில் பயணிப்பது சாகசம் நிரம்பியது. கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருப்பதால், இந்தப் பகுதிகளில் பயணிக்கும் போது சுவாசப் பிரச்னைகளோ, மூச்சுத் திணறலோ ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்தச் சாலை மக்கள் பயன்படுத்துவதற்காக ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை திறக்கப்படும். ’லடாக் பகுதியின் சமூகப் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, இந்தச் சாலையால் சுற்றுலாவும் பெருகும்’ என்று அரசு இந்தச் சாலையின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்திருந்தது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த சாலையில் மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. Border Roads Organisation அமைப்பின் பொறுப்பில், இங்கு கொடி ஏற்றப்பட்டது.