10-ஆம் வகுப்பு மாணவனுக்கு 33 லட்சம் ரூபாயில் வேலை...வயதால் வாய்ப்பை தவறவிட்ட ஜீனியஸ்.. ஒரு சுவாரஸ்ய கதை..
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் நடத்திய இணைய கோடிங் போட்டியில் இவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா நாக்பூரைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுவன் வேதாந்த் தியோகேட் பெருமைப்பட வேண்டியவை நேரம் இது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் நடத்திய இணைய கோடிங் போட்டியில் இவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். வேதாந்த் இரண்டு நாட்களுக்குள் 2,066 வரிகளுக்கு கோடிங்கை எழுதி போட்டியில் வென்றுள்ளார்.
1,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட கோடிங் போட்டியில் வெற்றி பெற்றவுடன், வேதாந்திற்கு அதே நிறுவனத்தால் ஆண்டுக்கு 33 லட்ச ரூபாய் ஊதியத்துடன் வேலை வழங்கப்பட்டது. இருப்பினும், நியூ ஜெர்சி விளம்பர நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுக் குழுவில் இடம் பெறுவதற்கான வேலை வாய்ப்பு, வேதாந்தின் வயது குறித்து அந்த நிறுவனத்திற்குத் தெரிய வந்ததை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
இந்த கசப்பான அனுபவத்தை தொடர்ந்து நிறுவனத்திடமிருந்து ஒரு ஊக்கமளிக்கும் செய்தி அச்சிறுவனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு படிக்கும் வேதாந்த், மனம் தளராமல் இருக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது. தனது கல்வியை முடித்துவிட்டு அவர்களை தொடர்பு கொள்ளுமாறு விளம்பர நிறுவனம் சிறுவனை ஊக்கப்படுத்தியது.
"உங்கள் அனுபவம், தொழில்முறை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம்" என நிறுவனம் சார்பில் வேதாந்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சுய பயிற்சியின் மூலம் கோடிங் திறமையை வளர்த்து கொண்ட வேதாந்த், தனது தாயின் மடிக்கணினியில் தனது திறமையை மெருகேற்றி கொண்டார். இரண்டு டஜன் ஆன்லைன் பயிற்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையை மேலும் மேம்படுத்தி கொண்டார். தாயின் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் கோடிங் போட்டிக்கான விளம்பரத்தை பார்த்துள்ளார்.
வேதாந்தின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் அஷ்வினி, நாக்பூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தங்கள் மகனின் சாதனை குறித்து பேசிய டியோகேட், “எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களது மகனின் பள்ளியிலிருந்து எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போதுதான், அவருக்கு வேலை கிடைத்திருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. வேதாந்த் தனது வயது மற்றும் பிற விவரங்களை நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள உதவியது பள்ளிதான்" என்றார்.
கோடிங் போட்டியில் வெற்றி பெற்றதால், விரைவில் வேதாந்திற்கு புதிய லேப்டாப்பை பரிசளிக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்