Manipur Issue Seeman: கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி; மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்ட பாரதத் தாய்! - சீமான் ஆவேசம்
மணிப்பூரில் பாரதத் தாய் நிர்வாணமாக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பாரதத் தாய் நிர்வாணமாக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான் அறிக்கை:
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பன்மை மைத்தேயி சமூகத்தை சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.ம் ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசு தலைவராக ஆக்கிவிட்டதாக பெருமை பேசிய பாஜக இரண்டு பழங்குடி பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள மனச்சான்றற்ற அநீதிக்கு என்ன பதில் கூறப்போகிறது? கண்முன்னே சக மனிதர்களுக்கு நிகழ்த்தப்படும் சிறிதும் மனித தன்மையற்ற இதுபோன்ற கொடுமைகளை அனுமதித்துவிட்டு, நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பியதை அறிவியல் வளர்ச்சி என்று இந்த நாகரீக நாடு கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் மோடி கண்டுபிடித்த புதிய இந்தியாவா? இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா?
மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பாஜக ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்! பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நடந்தது என்ன?
மணிப்பூர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை:
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே வெடித்த மோதலை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகும் கூட, அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில், குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கைளை மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
குவியும் கணடங்கள்:
இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார். பழங்குடியின பெண்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.