Crime : மாட்டிறைச்சியை கடத்தி சென்றதாக இஸ்லாமியர் அடித்து கொலை.. மீண்டும் தலையெடுக்கும் கொடூரம்
மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். பசு காவலர்கள் என சொல்லி கொள்ளும் கும்பல்தான் இந்த கொலையை செய்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாட்டிறைச்சியை கடத்துவதாக கூறி இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
அக்லக் கொலை வழக்கு:
கடந்த 2015ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தில், வீட்டில் மாட்டிறைச்சியை வைத்திருப்பதாக கூறி, 51 வயது நபரான அக்லக் கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த குறிப்பிட்ட சம்பவம், சமாஜ்வாதி கட்சி ஆட்சி காலத்தில் நடந்திருந்தாலும் பெரும்பாலான சம்பவங்கள், பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலலேயே அதிகம் நடக்கிறது.
இது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது. அதன் தொடர்ச்சியாக, கடந்த சனிக்கிழமை இரவு, மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். பசு காவலர்கள் என சொல்லி கொள்ளும் கும்பல்தான் இந்த கொலையை செய்துள்ளது.
மாட்டிறைச்சியை கடத்தி சென்றதாக இஸ்லாமியர் அடித்து கொலை:
மும்பையின் குர்லாவைச் சேர்ந்த 32 வயதான அஃபான் அன்சாரி, அவரது உதவியாளர் நசீர் ஷேக் என்பவருடன் சேர்ந்து காரில் இறைச்சியை ஏற்றிச் சென்றபோது, பசு காவலர்களால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சுனில் பாம்ரே கூறுகையில், "சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, கார் சேதமடைந்த நிலையில் இருந்தது. காயமடைந்தவர்கள் காருக்குள் இருந்தனர். நாங்கள் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தோம். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்தவர் அளித்த புகாரின் பேரில், கொலை, கலவரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அவர்கள் உண்மையில் மாட்டிறைச்சியை கடத்தினார்களா இல்லையா என்பது ஆய்வக அறிக்கை வந்த பிறகே தெரியவரும்" என்றார்.
பசு வதை தடைச் சட்டம் செல்லுபடியாகும் என மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பசுக்களை வெட்ட தடைசெய்யும் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆணையத்தை அமைப்பதற்கான முன்மொழிவுக்கு, மார்ச் மாதத்தில், மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்தது.
பசு, காளையை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் எந்த வாகனத்தையும் நிறுத்தி, சோதனை செய்து அதனை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இறைச்சியைக் கொண்டு செல்வதற்கான தடையையும் நீதிமன்றம் உறுதி செய்தது.