இரட்டை தங்க பற்கள்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு கடத்தல்காரரை பொறி வைத்து பிடித்த மும்பை போலீஸ்..நடத்தது என்ன?
15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 38 வயது பிரவின் அசுபா ஜடேஜாவை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு கடத்தலில் ஈடுபட்ட ஒரு கடத்தல்காரரை காவல்துறையினர் தற்போது பொறி வைத்து பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த கடத்தல்காரரை பிடிக்க அவரின் தங்க பற்கள் உதவிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 38 வயது பிரவின் அசுபா ஜடேஜாவை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்த இவருக்கு இரண்டு தங்க பற்கள் இருந்துள்ளது. துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த இவர், கடந்த 2007ஆம் ஆண்டு கடை உரிமையாளரிடம் இருந்து 40,000 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பல குற்றங்களில் ஈடுபட்ட இவர் பிடிபடாமல் இருக்க அடையாளத்தை மாற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகருக்கு இடம் பெயர்ந்துள்ளார். இவரை பற்றி விரிவாக பேசியுள்ள காவல்துறை அதிகாரி, "இவர் பிரவின் அசுபா ஜடேஜா, பிரவின் சிங், பிரதீப் சிங் அசுபா ஜடேஜா ஆகிய பெயர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையை திசைதிருப்பி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.
பின்னர், விசாரணைக்குப் பிறகு, இவர் மும்பையிலிருந்து தலைமறைவானார். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
கடந்த 2007ஆம் ஆண்டு துணிக்கடையில் விற்பனையாளராக பிரவின் பணிபுரிந்து வந்தார். அவரது உரிமையாளர் ஒருமுறை மற்றொரு வியாபாரியிடம் 40,000 ரூபாயை வசூலிக்கச் சொன்னார். பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்குப் பதிலாக, கழிவறையில் இருந்த பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகக் கூறி போலீஸாரையும் உரிமையாளரையும் ஏமாற்றியுள்ளார் பிரவின்.
விசாரணையில் பிரவின் பணத்தை தன்னிடமே வைத்துக்கொண்டு போலீசாரை ஏமாற்றியது தெரியவந்தது. இவர், கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தலைமறைவானார்" என்றார்.
தற்போது இவரை பொறி வைத்து பிடித்திருப்பது குறித்து பேசிய காவல்துறை தரப்பு, "சில நாட்களுக்கு முன், போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். அதில், இவரின் முன்னாள் கூட்டாளிகளை விசாரித்ததில், பிரவின் குஜராத்தின் கச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி தாலுகாவின் சப்ராய் கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
போலீசார் எல்ஐசி ஏஜெண்டுகளாக செயல்பட்டு பிரவினை மும்பைக்கு வரவழைத்தனர். உறுதி செய்யப்பட்ட பின்னர், குற்றவாளி கைது செய்யப்பட்டார்" என்றார்.
15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கடத்தல்காரரை மும்பை காவல்துறை தங்க பற்கள் அடையாளத்தை வைத்து கைது செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, இது போன்ற பல சம்பவங்கள் நடந்து, அதன் அடிப்படையில் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, தூம் படத்தில் வருவது போன்ற திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து அனைவரின் கவனத்தை பெற்றது.