Instagram Followers: இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்ஸ் ஆசை.. 55 ஆயிரம் பணத்தை பறிகொடுத்த 10ம் வகுப்பு சிறுமி..
இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்சுக்கு ஆசைப்பட்டு 55 ஆயிரம் பணத்தை 10ம் வகுப்பு சிறுமி பறிகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு மக்கள் ரசித்து வருகின்றனர். இதனால், இன்ஸ்டாகிராமில் பாலோயர்ஸ் எனப்படும் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பாலோயர்ஸ்க்கு ஆசைப்பட்டு 10ம் வகுப்பு மாணவி ஆயிரக்கணிக்கல் பணத்தை இழந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது.
இன்ஸ்டா மோகம்:
மும்பையில் பெற்றோர்களுடன் வசித்து வருபவர் 16 வயது நிறைந்த சிறுமி. 10-ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் எப்போதும் ஆர்வமாக இருந்து வந்தார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தனக்கு அதிகளவில் பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என்று அந்த மாணவி ஆசைப்பட்டுள்ளார். அப்போது, கடந்த மாதம் சோனாலி சிங் என்ற பெண் பெயரில் ஒரு கணக்கில் இருந்து அந்த சிறுமியை பாலோ செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமியும் சோனாலி பாலோ செய்வதற்கு அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி சோனாலி அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், தான் பழைய பள்ளி தோழி என்றும் பேசியுள்ளார். பின்னர், அந்த சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் பெறுவதற்கு தான் உதவி செய்வதாக சோனாலி கூறியுள்ளார். ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் பாலோயர்ஸ் வருவதற்கு தான் உதவி செய்வதாக கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் 2000 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.
அதிக பாலோயர்ஸுக்கு ஆசை:
ஆனால், அந்த சிறுமி தன்னிடம் ரூபாய் 600 மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். அந்த சிறுமியிடம் 600 ரூபாயை வாங்கிக்கொண்ட சோனாலி, இன்ஸ்டாகிராமில் பாலோயர்ஸ் அதிகரிக்க இந்த தொகை போதாது என்று கூறியுள்ளார். தன்னிடம் போதிய பணம் இல்லாததாலும், இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் வர வேண்டும் என்ற ஆசையிலும் அந்த 10-ஆம் வகுப்பு சிறுமி தனது தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து சிறுக, சிறுக பணம் செலுத்த தொடங்கியுள்ளார். முதலில் 4 ஆயிரம் சோனாலிக்கு அந்த சிறுமி செலுத்தியுள்ளார்.
பறிபோன 55 ஆயிரம்:
பின்னர், பல முறை படிப்படியாக இதேபோல சோனாலிக்கு அந்த சிறுமி பணம் செலுத்தியுள்ளார். ஆனாலும், அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை. அப்போதுதான், தன்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் 55 ஆயிரம் வரை மாயமானதை கண்டு அந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, தனது மகளிடம் இதுதொடர்பாக விசாரித்தபோதுதான் அந்த சிறுமி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.
பின்னர், தனது மகள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த சிறுமியின் தந்தை உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் வர வேண்டும் என்பதற்காக ரூபாய் 55 ஆயிரத்தை 10-ஆம் வகுப்பு மாணவி ஏமாந்து இழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவர்களும், இளைஞர்களும், முதியவர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் அதை கையாள வேண்டும். மேலும், முன்பின் தெரியாதவர்களுக்கு உங்கள் வங்கிக்கணக்கு எண், பாஸ்வேர்டு போன்வற்றை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும். இணையதள பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு இந்தியாவில் சைபர் வழி குற்றங்கள் அதிகளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.