"முல்லைப்பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை" - பொய் பரப்பினால் நடவடிக்கை -பினராயி!
முல்லை பெரியாறு அணை குறித்து, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்கள் மீதும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்படி பேசுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- பினராயி விஜயன்
தமிழக - கேரள மாநில எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. அணை கேரளத்தில் இருந்தாலும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழகத்துக்கு இடையே தொடர்ந்து பல வருடங்களாக சர்ச்சை நிலவி வருகிறது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் உச்சபட்ச உயரம் 155 அடி. அதிகபட்ச கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். தற்போது 142 அடிவரை நீர் தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் மேற்கொண்டு வருகிறது. 125 ஆண்டுகள் மிகவும் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். கேரளா இரண்டாக என்பதால் கேரள அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வைகை அணைக்கு நீரை திறந்துவிட கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர் கடிதம் எழுதினார். இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையை கைவிட வேண்டும் என மலையாள நடிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்ததை தொடர்ந்து பலரும் Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அதனால் மீண்டும் முல்லைப்பெரியாறு பிரச்சனை தலைதூக்க துவங்கியது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், அணையின் உறுதி தன்மை குறித்து கேரளாவை சேர்ந்த பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் எனவும் கேரள மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கேரளாவில் உள்ள அணையை திறக்கவோ மூடவோ தமிழ்நாடு அரசிடம் சென்று நிற்கவேண்டிய நிலை இருப்பதை பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் பினராயி விஜயன், முல்லை பெரியாறு அணை குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் இந்த விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி என்றும் குற்றம்சாட்டினர். முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை, நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் மழை தொடர்ந்தால், நிலையான கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது போல் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாக இருக்கிறது என்றும், தேவையில்லாமல் அணையை சொந்தம் கொண்டாடும் பிரச்சனையை பேச கூடாது என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.