IPL Final 2023: இறுதிப்போட்டியில் விளையாட தோனிக்கு தடையா..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
கால தாமதத்தை ஏற்படுத்துவதற்காக தோனி உள்நோக்கத்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால், இறுதி போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 23ஆம் தேதி முதல் ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடின.
முதல் குவாலிபயர் போட்டி:
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது குஜராத் அணி. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. முகமது ஷமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் குஜராத் அணி சார்பில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதன் காரணமாக சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10வது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனி, விதிகள் தொடர்பாக நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டாரா தோனி..?
சென்னை – குஜராத் அணியின் ஆட்டத்தின் போது போட்டியின் நடுவே பந்து வீச்சாளர் பதிரனா மைதானத்தை விட்டு சில நிமிடங்கள் வெளியேறியுள்ளார். ஐபிஎல் நிபந்தனைகளின்படி, மைதானத்திலிருந்து ஓய்வு எடுக்க செல்லும் வீரர் ஒருவர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திரும்ப வேண்டும்.
அப்படி வரவில்லை என்றால், 9 நிமிடங்களுக்கு பின்னரே பந்து வீச அனுமதிக்கப்படுவர். ஆனால், பதிரனா மைதானத்திற்கு திரும்பியதும் பந்து வீச தயாரானார். குஜராத் டைட்டன்ஸ் 30 பந்துகளில் வெற்றி பெற 71 ரன்கள் தேவை என்ற நிலையில், 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.
இப்படிப்பட்ட பரபரப்பான கட்டத்தில், மீண்டும் மைதனாத்திற்கு திரும்பிய பத்திரனா 4வது நிமிடத்தில் அணியின் சார்பில் பந்து வீச்சு அனுமதிக்கப்பட்டார். நடுவர்கள் தலையிட்டு, பந்து வீச அனுமதிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தோனி நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தோனிக்கு தடையா?
கால தாமதத்தை ஏற்படுத்துவதற்காக தோனி உள்நோக்கத்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால், இறுதி போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2ஆவது குவாலிபையரில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் களம் இறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதி போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும். புதன்கிழமை நடந்த எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது.