வருங்கால மருமகனுக்கு 125 வகையான உணவு சமைத்துக் கொடுத்து அசத்திய மாமியார்!
தங்கள் வருங்கால மாப்பிள்ளைக்கு முன்கூட்டியே விருந்தளிக்க விரும்பி தசரா பண்டிகைக்கு அழைத்து அவருக்கு தடல் புடல் விருந்து வைத்துள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த மாமியார் ஒருவர் தன் வருங்கால மருமகனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்துக் கொடுத்து அசத்திய சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், விஜயநகரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் மகன் சைதன்யா. இவருக்கும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தங்கள் வருங்கால மாப்பிள்ளைக்கு முன்கூட்டியே விருந்தளிக்க விரும்பி மாப்பிள்ளை சைதன்யாவை தசரா பண்டிகைக்கு அழைத்துள்ளனர் மணப்பெண் குடும்பத்தினர்.
அதனை ஏற்று தசரா கொண்டாட வந்த வந்த சைதன்யாவுக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை மாமியார் தனலட்சுமி சமைத்துக் கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் மாமியாரின் உபசரிப்பைக் கண்டும், சாப்பிட முடியாமலும் சைதன்யா திணறும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மேலும் தன் மாமியார் சமைத்துக் கொடுத்ததில் பல உணவுளின் பெயர்கள் கூட தனக்குத் தெரியாது என்றும் ஆனால் உணவு மிக ருசியாக இருந்ததாகவும் சைதன்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.