Morning Headlines Today: காலை தலைப்புச் செய்திகள்: உள்ளூர் முதல் உலகம் வரை
20 ஏப்ரல் 2021 காலை 6 மணி வரையிலா முக்கிய தலைப்புச் செய்திகளின் தொகுப்பு இதோ.
உள்ளூர் முதல் உலகம் வரையில் இன்றைய நாளின் துவக்கத்திற்கான முக்கிய தலைப்புச் செய்திகளின் தொகுப்பு இதோ. இரவு ஊரடங்கில் துவங்கி , கொரோனாவின் கோரத்தாண்டவம் வரை அத்தனை விபரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. முழு தொகுப்பாக இல்லாமல் சுருக்கமாக செய்திகளை இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம்.
* கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவை இல்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதம்தான் முழு ஊரடங்கு ஆகும் - பிரதமர் மோடி
* தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த இரவு ஊரடங்கால் சாலை வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுவதும் இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
* இரவு நேர ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பு. ஊரடங்கின் முதல் நாள் என்பதால் சில இடங்களில் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை மட்டும் விடுத்து அனுப்பினர்.
* இரவு நேர ஊரடங்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
* தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது.
* காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி.
* புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கால் மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
* புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு. முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி.
* புனேவில் இருந்து மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தது.
* கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.
* மேற்கு வங்க மாநிலத்தில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. 43 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு
* நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 20 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
* இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால், அமெரிக்கர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுரை
* மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. புள்ளிகள் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
* இன்று மாலை நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும், இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
இது போன்ற அடுத்தடுத்த அப்டேட் செய்திகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் காண ABP நாடு இணையத்தில் இணைந்திருங்கள்.