(Source: ECI/ABP News/ABP Majha)
புதுச்சேரி : தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம்..
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் புதுச்சேரி மாநிலம், பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. புதுச்சேரியில் ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் புதுச்சேரியே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. வீடுகளில் புகுந்த மழை நீர் படிப்படியாக வடிந்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரி, வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் நீரும் ஊருக்குள் புகுந்து வருகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இதனால் ஆற்றையொட்டிய பரிக்கல்பட்டு, கொமந்தான்மேடு, இருளன்சந்தை, சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், உச்சிமேடு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. பாகூரில் மாட வீதி தவிர மற்ற பகுதிகளான பங்களா வீதி, புதிய காமராஜ் நகர், குட்டை, பாகூர்பேட், மகா கணபதி நகர், கூட்டுறவு குடியிருப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பாகூர் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
மக்கள் வெளியில் வர முடியாமலும், தங்களது உடமைகளை எடுத்து செல்ல முடியாமலும் தவித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். பாகூர் புதிய நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். மீட்புப் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த லையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்தது. அதுவே மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனாலும், தென்பெண்ணையாற்றில் மேலும் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தகவலாலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்திலும் பாகூர் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் உள்ளனர்.