Montha cyclone: இன்றே உருவாகிறது மோன்தா புயல்.. அடித்து வெளுக்கப்போது மழை - இவ்ளோ ஸ்பீடு தாங்காது!
வங்கக்கடலில் நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோன்தா புயல் இன்று மாலை உருவாகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக நாளை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுவடைந்துள்ளது.
இன்றே உருவாகும் மோன்தா புயல்:
இந்த நிலையில், நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோன்தா புயல் இன்றே உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தற்போது 790 கி.மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

ஆந்திரா நோக்கி மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் தற்போது நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று மாலை 5 மணிக்கு மேல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோன்தா புயல் ஆந்திராவின் மசிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.
நேற்று காலை 5.30 மணிக்கு வங்க்கடலின் தென்கிழக்கில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காலை 5.30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
110 கி.மீட்டர் வேகத்தில் காற்று:
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பிறகு இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த மோன்தா புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 90 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் கற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் 110 கி.மீட்டர் வேகத்தில்கூட காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது.
மோன்தா புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தமட்டில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.
மோன்தா புயல் உருவாக உள்ள சூழலில் அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகர உள்ளது. இதனால், கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
மோன்தா புயல் காரணமாக அதிக பாதிப்புகளை ஆந்திராவே எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புயல் கரையை கடக்கும் பகுதியாக கணிக்கப்பட்டுள்ள காக்கிநாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஒடிசாவிலும் ஓரளவு மழை பாதிப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆந்திராவில் மோன்தா புயல் காரணமாக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மீட்புப்படையினர், மருத்துவ குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த மோன்தா புயல் காரணமாக பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.





















