"இந்தியாவின் பணம் இனி இந்தியாவுக்கு பயன்படும்" அதானியை வைத்து கொண்டு சொன்ன மோடி
இந்தியாவின் பணம் இனி இந்தியாவுக்கு பயன்படும் என்றும், ஒரு காலத்தில் நாட்டிற்கு வெளியே சென்ற நிதி இனி கேரளா மற்றும் விழிஞ்சம் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். திருவனந்தபுரத்தில் மகத்தான சாத்தியக்கூறுகள் நிறைந்த பரந்த பெருங்கடல் ஒருபுறம் இருப்பதையும், மறுபுறம் இயற்கையின் வியத்தகு அழகு அதன் பிரம்மாண்டத்தை மேலும் கூட்டுவதையும் மோடி எடுத்துரைத்தார்.
"இந்தியாவின் பணம் இனி இந்தியாவுக்கு பயன்படும்"
இவை அனைத்திற்கும் மத்தியில், விழிஞ்சம் ஆழ்கடல் துறைமுகம் இப்போது புதிய யுகத்திற்கான வளர்ச்சியின் அடையாளமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்காக கேரள மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
விழிஞ்சம் ஆழ்கடல் துறைமுகம் ரூ. 8,800 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், வரும் ஆண்டுகளில் இந்தக் கப்பல் போக்குவரத்து மையத்தின் திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும், இதனால் உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் சிலவற்றின் சுமூகமான வருகை சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கப்பல் போக்குவரத்தில் 75% முன்னர் வெளிநாட்டு துறைமுகங்கள் மூலம் நடத்தப்பட்டன என்பதையும், இதனால் நாட்டிற்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை இப்போது மாற உள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் பணம் இனி இந்தியாவுக்கு பயன்படும் என்றும், ஒரு காலத்தில் நாட்டிற்கு வெளியே சென்ற நிதி இனி கேரளா மற்றும் விழிஞ்சம் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
"உலக வர்த்தகத்திற்கு முக்கிய மையம்"
காலனித்துவ ஆட்சிக்கு முன், இந்தியா பல நூற்றாண்டுகள் செழிப்புடன் இருந்தது என்று குறிப்பிட்ட மோடி, ஒரு கட்டத்தில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கினைக் கொண்டிருந்தது என்பதை எடுத்துரைத்தார்.
அந்தக் காலத்தில் இந்தியாவை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்தியது அதன் கடல்சார் திறன் மற்றும் அதன் துறைமுக நகரங்களின் பொருளாதார செயல்பாடுதான் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தக் கடல்சார் வலிமையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் கேரளா குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டிருந்தது என்று கூறிய அவர், கடல்சார் வர்த்தகத்தில் கேரளாவின் வரலாற்றுப் பங்கினை எடுத்துரைத்தார்.
அரபிக் கடல் வழியாக, இந்தியா பல நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளைப் பேணி வந்தது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கேரளாவைச் சேர்ந்த கப்பல்கள் பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் சென்றன. இது உலகளாவிய வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய மையமாக மாறியது என்று அவர் குறிப்பிட்டார்.
"இன்று, இந்தப் பொருளாதார சக்தியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது" என்று அவர் கூறினார். மேலும், "இந்தியாவின் கடலோர மாநிலங்களும் துறைமுக நகரங்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய மையங்களாக மாறும்" என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





















