MHC Chief Justice: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்தச் சூழலில் தற்போது அவரை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். கடந்த மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முனீஷ்வர்நாத் பண்டாரி சட்டப்படிப்பை முடித்து ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு நீண்ட நாட்கள் பணியாற்றிய பிறகு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு 2021ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். அப்போது முதல் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். 1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி பிறந்த முனீஷ்வர்நாத் பண்டாரி பிறந்துள்ளார். தற்போது அவருக்கு 61 வயது நிரம்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் 62 வயது வரை இருக்க முடியும். ஆகவே இன்னும் 7 மாதங்களுக்கு இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: மணிப்பூர் தேர்தல் தேதியை திடீரென மாற்றம் செய்த தேர்தல் ஆணையம்! விவரம்!!