Medical Colleges:”22 எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல்; கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு திட்டம்" - மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்
நாட்டில் தற்போது 358 அரசு மற்றும் 296 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக மத்திய அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது,
மருத்துவ கல்லூரிகள்
தேசிய மருத்துவ ஆணையத்தின், அறிக்கையின்படி, நாட்டில் தற்போது 358 அரசு மற்றும் 296 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தற்போதுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத, பின்தங்கிய பகுதிகள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, 'தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கான' மத்திய நிதியுதவி திட்டத்தை நிர்வகிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் சிறப்பு வகை மாநிலங்களுக்கு 90 பங்கு மத்திய அரசும் 10 பங்கு மாநில அரசும் வழங்கும். பிற மாநிலங்களுக்கு 60 பங்கு மத்திய அரசும் 40 பங்கு மாநில அரசும் வழங்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதிப் பகிர்வுடன் மொத்தம் 157 மருத்துவக் கல்லூரிகள் மூன்று கட்டங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க திட்டம்:
எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம்) இடங்கள் மற்றும் பி.ஜி (முதுநிலை மருத்துவம்) இடங்களை அதிகரிப்பதற்காகவும் தற்போதுள்ள மாநில அரசு/மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்காகவும் மத்திய அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் சிவில் வேலைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது.
இந்தத் திட்டங்களின் கீழ், 77 கல்லூரிகளில் 4677 எம்பிபிஎஸ் இடங்களும், 72 கல்லூரிகளில் முதல் கட்டத்தில் 4058 முதுநிலை இடங்களும், நாட்டிலுள்ள 60 கல்லூரிகளில் இரண்டாம் கட்டத்தில் 3858 பிஜி இடங்களும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
22 எய்ம்ஸ்
மூன்றாம் நிலை சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாட்டில் மொத்தம் 75 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.