"அது அசிங்கம்" கறி, மீன் செய்யக்கூடாது என சொன்ன குஜராத்தி மக்கள்.. அப்பார்ட்மெண்டில் சர்ச்சை
அசைவ உணவு சாப்பிடுவதால் தங்களை தரம் தாழ்த்தி நடத்துவதாக குஜராத்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது மராத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அது மட்டும் இல்லாமல், மராத்தியர்களை அசுத்தமானவர்கள் என்று அழைத்ததாகவும், வீட்டில் இறைச்சி மற்றும் மீன் சமைப்பதை குஜராத்தியகள் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் அசைவ உணவு சாப்பிடுவது குறித்து மராத்தி மொழி பேசும் மக்களுக்கும் குஜராத்திய சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது. வீட்டில் கறி, மீன் செய்யக்கூடாது என குஜராத்தியர்கள் கட்டுப்பாடு விதித்திருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான பிரச்னை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பிரச்னையை தீர்க்க மும்பை போலீஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
கறி, மீன் செய்ய அப்பார்ட்மெண்டில் கட்டுப்பாடு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கிட்டத்தட்ட 24 லட்சம் குஜராத்திய மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கும் மண்ணின் மைந்தர்களாக கருதப்படும் மராத்தி மொழி பேசும் மக்களுக்கும் அவ்வப்போது பிரச்னை வெடிப்பது வழக்கும். குறிப்பாக, தங்களின் வேலைகளை குஜராத்தியர்கள் பறித்து கொள்வதாக மராத்தியர்களில் சிலர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். கலாசார ரீதியாகவும் இருவருக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன.
இந்த நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான காட்கோபரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கறி, மீன் சாப்பிடுவது தொடர்பாக மராத்தி மொழி பேசும் மக்களுக்கும் குஜராத்திய சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும் இடையே பிரச்னை வெடித்தது.
அசைவ உணவு சாப்பிடுவதால் தங்களை தரம் தாழ்த்தி நடத்துவதாக குஜராத்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது மராத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மராத்தியர்களை அசுத்தமானவர்கள் என்று அழைத்ததாகவும், வீட்டில் இறைச்சி மற்றும் மீன் சமைப்பதை குஜராத்தியகள் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மராத்தியர்கள் vs குஜராத்தியர்கள்:
இருவருக்கும் இடையேயான பிரச்னை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள், மராத்தியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குஜராத்தியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தை எழுப்பி, எம்என்எஸ் கட்சி தலைவர் ராஜ் பார்டே, குஜராத்திகளுடன் வாக்குவாதம் செய்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்பில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். மும்பை போன்ற பெரு நகரத்தில் மற்றவர்களின் உணவுப் பழக்கங்களில் யாரும் தலையிடக் கூடாது எம்என்எஸ் கட்சி தலைவர் ராஜ் பார்டே வலியுறுத்தினார்.
பதற்றம் அதிகரிக்கும் என்று அஞ்சி, குடியிருப்பாளர்கள் போலீசாரை அழைத்து வந்துள்ளனர். முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்பாளர்களிடம் ஒற்றுமையாக வாழவும், மற்றவர்களை துன்புறுத்த வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
உணவு பழக்க வழக்கம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மராத்தி மொழி பேசும் குடியிருப்பாளர்கள் பாகுபாட்டை எதிர்கொள்வதாக எம்என்எஸ் மற்றும் சிவசேனா கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மராத்தி மொழியைப் பேசுவது குறித்து எம்என்எஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.





















