Mann Ki Baat Highlights: ”வீட்டில் கொடியேற்றி, கையில் மண்ணுடன் செல்ஃபி எடுத்து போடுங்கள்”- பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மனதில் குரல்:
'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்றும், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வானொலி மூலமாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 103வது வாரமாக இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, 75ம் ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா தொடர்பாக விரிவாக பேசினார்.
பிரதமர் மோடி பேச்சு:
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
“சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் உற்சாகத்தோடு அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அமுதப் பெருவிழாவின் போது, தேசத்தில் சுமார் இரண்டு இலட்சம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. பன்முகத்தன்மையால் நிறைந்திருக்கின்றன.
நமது வரலாற்றிலே கோட்டைகளின் மகத்துவம் என்ன என்பதை நாமனைவருமே நன்கறிவோம். இதை எடுத்துக் காட்டக்கூடி இயக்கமான கோட்டைகளும், கதைகளும், அதாவது கோட்டைகளோடு தொடர்புடைய கதைகளுமே கூட மக்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன. இன்று தேசத்தின் நாலாபுறத்திலும் அமுதப் பெருவிழா எதிரொலிக்கும் வேளையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசத்தின் மேலும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது.
உயிர்த்தியாகம் செய்த வீரர்கள், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் ”என் மண் என் தேசம்” இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையிலே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த ஆளுமைகளின் நினைவாக, தேசத்தின் லட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துக்களில், சிறப்புக் கல்வெட்டுகளும் நிறுவப்படும். இந்த இயக்கத்தின்படி தேசமெங்கும் அமுதக் கலச யாத்திரையும் மேற்கொள்ளப்படும்.
அமுதக்கலச யாத்திரை
தேசத்தின் கிராமங்கள்தோறும், பட்டி தொட்டிகளிலிருந்தும், 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை, தேசத்தின் தலைநகரான டெல்லியை வந்தடையும். இந்த யாத்திரையானது, தன்னோடு கூடவே தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, மண்ணோடு சேர்ந்து செடிகளையும் கொண்டு வரும். 7500 கலசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும், செடிகளையும் சேர்த்து, தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலே அமுதப் பூங்காவனம் நிர்மாணிக்கப்படும். இந்த அமுதப் பூங்காவனம், ’ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்’ மிக உன்னதமான அடையாளமாக இருக்கும்.
கடந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளின் அமுதக்காலத்தை ஒட்டிய 5 உறுதிமொழிகள் குறித்துப் பேசியிருந்தேன். ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு நாம் இந்த 5 உறுதிமொழிகளை நிறைவேற்றும் சபதமும் ஏற்போம். நீங்கள் அனைவரும், தேசத்தின் புனிதமான மண்ணை கைகளிலே ஏந்தி சபதம் எடுக்கும் வகையிலே உங்களை நீங்களே சுயமாகப் படம் பிடித்து, அதாவது செல்ஃபி எடுத்து, yuva.gov.in இலே கண்டிப்பாகத் தரவேற்றம் செய்யுங்கள். கடந்த ஆண்டு சுதந்திரத் திருநாளன்று, வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்திற்காக, எப்படி நாடு முழுவதும் ஒருங்கிணைந்ததோ, அதே போல நாம் இந்த முறையும் மீண்டும், வீடுகள்தோறும் மூவண்ணத்தைப் பறக்க விட வேண்டும்.
இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த முயற்சிகளில் நமது கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும், தேசத்தின் சுதந்திரத்திற்காக அளிக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற உயிர்த்தியாகங்கள் பற்றிய அறிதல் உதிக்கும், சுதந்திரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஏற்படும். ஆகையால், நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், இந்த முயற்சிகளோடு கண்டிப்பாக இணைய வேண்டும்.”
இவ்வாறு மோடி வலியுறுத்தினார்.