Rahul Gandhi: மன்மோகனை அலட்சியப்படுத்திய ராகுல்..! திரும்பியதா கர்மா? என்ன நடந்தது 2013 ஆம் ஆண்டில்?
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் அவசர சட்டத்துக்கு, ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தது, இன்று அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு காரணமாக, கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
8 ஆண்டுகள் போட்டியிட முடியாது:
இதனிடையே, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அதற்கு தடை பெற ராகுல் காந்திக்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் தண்டனைக்கு தடை பெறாவிட்டால் ராகுல் காந்தி சிறையில் அடைக்கப்படுவார். இதையடுத்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் மற்றும் அதை அடுத்த 6 ஆண்டுகள் என 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழல் உருவாகும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
முன்னதாக, எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து, 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை பெற்ற எம்.பி-க்கள், 3 மாத காலம் வரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்பதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே, தகுதி நீக்கம் உடனடியாக அமலுக்கு வரும் என்பதை உறுதி செய்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்க மாட்டார்
ஆனால், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அவசர சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அந்த அவசர சட்டத்துக்கு, காங்கிரசைச் சேர்ந்த ராகுல் காந்தியே கடும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அச்சட்டம் திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி அந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்க மாட்டார், 3 மாத கால அவகாசம் கிடைத்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து பாஜகவைச் சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Manmohan Singh ji wanted to bring in an ordinance on SC judgment passed in 2013. @RahulGandhi tore it into pieces. Ironically, his disqualification comes from the same judgment.
— KhushbuSundar (@khushsundar) March 24, 2023
#Karma
அதில் தெரிவித்துள்ளதாவது, 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீது அவசரச் சட்டம் கொண்டு வர மன்மோகன் சிங் விரும்பினார். ஆனால் ராகுல் காந்தி அதை துண்டு துண்டாக கிழித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவரது தகுதி நீக்கம், அதே தீர்ப்பில் இருந்து வருகிறது என்றும் இதுதான் கர்மா என்றும் பதிவிட்டுள்ளார்.
அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என ராகுல் தெரிவித்தார் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.