Manish Sisodia: கிடுக்குப்பிடி..மேலும் 5 நாள்களுக்கு காவல்...சிசோடியாவுக்கு தொடர் சிக்கல்..!
துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் காவலை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.
இந்த விவகாரத்தில், சிசோடியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய, மேலும் ஒரு வாரம் அவரை காவலில் வைக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை இயக்குநரகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிசோடியா தரப்பு வாதம்:
அப்போது, சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் அவரிடம் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரித்தனர். மேலும் அவரை இனி சிறையில் வைத்திருக்க தேவையில்லை. ஏழு மாதங்கள் வழக்கை விசாரித்த பிறகு, அவர்கள் மேலும் காவலில் வைக்க அனுமதி கோருகிறார்கள்.
இதுவரை, விசாரணையில் என்ன கிடைத்தது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். சிபிஐ விசாரணையை அமலாக்க இயக்குனரகம் மேற்கொண்டு வருவதால் காவலை நீட்டிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அமலாக்கத் துறையால் குற்றத்தின் வழியாக கிடைக்கபெற்ற வருவாய் குறித்து மட்டுமே விசாரிக்க முடியும். குற்றத்தை அல்ல.
மோத வேண்டும் என்பதற்காக மட்டுமே அமலாக்கத்துறை காவலில் வைக்க அனுமதி கோருகிறது. நேற்று மாலை வரை விசாரணை நடந்தது" என தெரிவித்தார்.
அமலாக்கத் துறை எதிர்ப்பு:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை தரப்பு, "சிபிஐ வழக்கில் சிசோடியா மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்தனர். சிசோடியா அவரின் மொபைல் போன்களை பலமுறை மாற்றியதால் ரூ. 1.38 கோடி இழப்பு ஏற்பட்டது" என தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஐந்து நாள்களுக்கு காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.
அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம் சாட்டினார்.
துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, பிப்ரவரி 26ஆம் தேதி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.