Manipur Issue: பரபரப்பு.. ! மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட விவகாரம் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
![Manipur Issue: பரபரப்பு.. ! மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட விவகாரம் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை manipur violence supreme court hearing on 31 july two woman paraded without clothes viral video Manipur Issue: பரபரப்பு.. ! மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட விவகாரம் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/d457fbd42a6501ae691dbecb7c95a9c01690780368743732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
மணிப்பூர் கலவரம்:
மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே இடையே ஏற்பட்ட மோதல் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. அதில் இருதரப்புக்கு இடையேயான மோதல், தீவைப்பு, வெட்டிக்கொலை போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிறைவேறி வருகின்றன. அதன் உச்சபட்சமாக குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பெரும் ஆண்கள் கூட்டத்தால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் அதிரடி:
மணிப்பூர் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே நேரடியாக தலையிட நேரிடும் என கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமயிலான அமர்வு எச்சரித்து இருந்தது. அதோடு, உள்துறை அமைச்சகம் ஜுலை 31ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
இந்நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். மே 4ம் தேதி நடைபெற்ற அந்த வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள மனுவில், குறிப்பிட்ட வீடியோவில் இருந்து தங்களது அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஆய்வு செய்ய உள்ள சூழலில், பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சிபிஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு:
வெளியுறவு அமைச்சக செயலர் அஜய் குமார் பல்லா மூலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மணிப்பூர் வைரல் வீடியோ தொடர்பான வீடியோ சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கு விசாரணை மணிப்பூருக்கு வெளியே நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மணிப்பூர் வைரல் வீடியோ தொடர்பான வழக்கை சிபிஐ முறையாக எடுத்துக்கொண்டு எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் பலி:
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இன மக்கள், தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் கோரிக்கை வைத்தது. இதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பளிக்க, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் வெடித்தது. அது வன்முறையாக வெடித்ததில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)