Manipur Violence : 24 மணிநேரத்தில் 9 பேர் கொலை..மணிப்பூரில் தொடரும் வன்முறை..என்னதான் நடக்கிறது..?
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் கலவரத்தால் அங்கு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், முடிவின் வன்முறை சம்பவங்கள் தொடர்வது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வன்முறை சம்பவங்களால் ஒரு பெண் உள்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காமன்லோக் பகுதியில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்த மரணங்கள் நடந்துள்ளன என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சைக்காக இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே இனக்கலவரம்:
வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் சிலரின் உடலில் வெட்டுக் காயங்கள் மற்றும் பல தோட்டா காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே இனக்கலவரம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பதற்றம் நிலவி வரும் நிலையில், அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு நடந்த சம்பவத்தை தொடர்ந்து, ஊடரங்கு தளர்வுகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காங்போக்பி மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் வன்முறை சம்பவம் நடந்த காமன்லோக் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. அங்கிருந்து பத்திரிகையாளர்கள் எடுக்கும் வீடியோக்களில் வெறிச்சோடிய தெருக்களே காணப்படுகிறது.
தற்போது, மணிப்பூரின் 16 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. வன்முறையைத் தூண்டும் வதந்திகளைத் தடுக்க மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் கலவரத்தால் அங்கு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். இந்த சூழலில், இரு பிரிவினரிடையே வெடித்துள்ள வன்முறை மணிப்பூரை கொந்தளிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் கூட, குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.