(Source: ECI/ABP News/ABP Majha)
Manipur Video Parade: நாட்டையே உலுக்கிய மணிப்பூர் வீடியோ; மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ்..!
Manipur Video Parade:மணிப்பூர் கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே வெடித்த மோதலை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகும் கூட, அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கைளை மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
குவியும் கணடங்கள்:
இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார். பழங்குடியின பெண்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
மத்திய அரசு விளக்கம்:
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மணிப்பூர் விவகாரம் ஒரு முக்கியமான பிரச்னை. விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் விரிவாகப் பதிலளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும்” என மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மணிப்பூர் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களின் விசாரணையின் நிலை, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் காயமடைந்த பிற நபர்களின் உடல்நிலை மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள்/குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போன்றவையும் அறிக்கையில் இருக்க வேண்டும் என்று மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
கும்பல் ஒரு பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸ் காவலில் இருந்து அழைத்துச் சென்று, இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து, அவர்களில் ஒருவரை கும்பல் பலாத்காரம் செய்தது. கும்பலிடம் இருந்து தங்கள் குடும்பப் பெண்களைக் காப்பாற்ற முயற்சி செய்ததற்காக இரண்டு ஆண் உறுப்பினர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், தேசிய மகளிர் ஆணையம் தாமகவே முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்து விசாரிக்கும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர் காவல்துறை 4 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் ட்வீட் செய்துள்ளது.