Manipur Violence: இதுக்கு ஒரு முடிவே இல்லையா! மணிப்பூரில் மீண்டும் வன்முறை... கொல்லப்பட்ட 13 பேர்: நடந்தது என்ன?
மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மீண்டும் வன்முறை:
மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பான்மையான மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.
மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது.
13 பேர் சுட்டுக் கொலை:
இந்த நிலையில், தற்போது மணிப்பூர் மீண்டும் ஒரு பெரிய மோதல் நடந்துள்ளது. அதாவது, மணிப்பூர் மாநிலம் டெங்பால் மாவட்டம் சைபால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பாதுகாப்பு படையின் முகாம் ஒன்று அமைந்துள்ளது. நேற்று ஒரு ஆயதக்குழுக்களுக்கு இடையே லெய்து கிராமத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் இருதரப்பினரும் ஒருவரைக்கொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உடனே பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் இருந்தன. மேலும், துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் பலியாகி இருந்தது தெரியவந்தது.
லெய்து கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மியான்மர் எல்லை 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தான் மோதல் ஏற்பட்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பாதுகாப்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? அவர்களின் விவரம் எதுவும் தெரியவில்லை. சில நாட்களாக மணிப்பூரில் அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது இப்படியொரு மோதல் ஏற்பட்டு 13 பேர் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க
Cyclone Michaung: 4 ஆயிரம் கோடி செலவிட்டும் வடியாத வெள்ளம்; ஸ்தம்பிக்கும் தலைநகர்; காரணம் என்ன?