Manipur Assembly: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட மணிப்பூர் சட்டப்பேரவை.. புறக்கணித்த பழங்குடி எம்எல்ஏக்கள்
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இரு பிரிவினர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டதோடு, பொருட்களை சூறையாடுதல், வீடுகளை தீயிட்டு கொளுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகின.
இதனால் தற்போது வரை 170 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த வன்முறையில், தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றமே முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், இதுவரை, மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது.
மணிப்பூர் சட்டப்பேரவையில் அமளி:
இத்தகைய பரபரப்பான சூழலில், இன்று மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. சட்டப்பேரவை கூட்டம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தை 5 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் இபோபி சிங் தலைமையிலான எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க ஒரு நாள் போதாது என்று கூறினர். அமளியை தொடர்ந்து, கூட்டம் தொடங்கிய 1 மணி நேரத்திலேயே தேதி குறிப்பிடாமல் மணிப்பூர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பிரேன் சிங், "வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவிக்கிறோம். இதுபோன்ற சமயங்களில், மோதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்திற்காக அனைத்து வேறுபாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் தீர்க்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவை தீர்மானித்துள்ளது" என்றார்.
சட்டப்பேரவைக்கு கூட வர முடியாத சூழல்:
ஒருநாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் பங்கேற்கமாட்டோம் என குக்கி-ஜோமி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி, இந்த சமூகத்தினரை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.-க்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மாநிலத்தின் சட்டப்பேரவை இம்பாலில்தான் உள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் இம்பால் பகுதிக்கு செல்வது பாதுகாப்பனது அல்ல எனக் கூறி, சட்டப்பேரவை கூட்டத்தை அவர்கள் புறக்கணித்துள்ளனர்.