இறந்துபோன இளைஞரின் செல்போன் எங்கே? ட்ராக் செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கேரள தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபரின் மரணம் குறித்து விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர், சடலத்திடம் இருந்து செல்போனை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மங்களபுரம். மங்களபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் அருண் என்ற வாலிபர் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக மங்களாபுரம் காவல்துறையினர் விசாரித்தார். விசாரணையில், உயிரிழந்த வாலிபர் அருண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அருணின் தாயார் தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவரை சிலர் கொலை செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தனது மகனின் செல்போனை காணவில்லை என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அருணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மங்களாபுரம் காவல்துறையினர் மீண்டும் விசாரணயை நடத்தினர். விசாரணையில் அருணின் செல்போன் எண்ணை ட்ராக் செய்தபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இருப்பினும், அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலமாக காவல்துறையினர் ட்ராக் செய்தனர்.
அப்போது, அந்த செல்போன் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாத்தனூரில் பயன்படுத்தப்பட்டு வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் செல்போனை எடுத்தவர் யார் என்பதை அறிந்த மங்களாபுரம் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அருணின் செல்போன் சாத்தனூர் காவல் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த செல்போனை சாத்தனூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஜோதி சுதாகர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த ஜோதி சுதாகர்தான் அருண் உயிரிழந்தபோது மங்களாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றியவர். மேலும், அருண் உயிரிழந்தபோது சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த காவல்துறை குழுவில் ஜோதி சுதாகரும் இடம் பெற்றிருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் ஜோதி சுதாகர் மங்களாபுரத்தில் இருந்து சாத்தனூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் அருண் உயிரிழந்த இடத்திற்கு சென்றபோது அவரிடம் இருந்த செல்போனை திருடியதாக ஒப்புக்கொண்டார். மர்மமான உயிரிழப்பின்போது சடலத்திடம் இருந்த முக்கிய ஆதாரமான செல்போனை ஒரு காவல் அதிகாரியே திருடியது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய காவல்துறை அதிகாரியே பொறுப்பற்ற முறையில் திருட்டு சம்பவத்தால் ஈடுபட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் செல்போனை திருடியது ஏன்? வேறு யாரேனும் கூறி செல்போனை திருடினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அருணிடம் இருந்த செல்போனை திருடிய காவல் உதவி ஆய்வாளர் ஜோதி சுதாகர், அந்த செல்போனிலே தனது சிம்கார்டை செலுத்தி தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.