”மக ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் பண்ணனும்” - கொட்டும் மழையில் குடை பிடித்த தந்தை : வைரல் புகைப்படம்
ஆன்லைனில் கல்வி கற்கும் மகள் மீது மழைநீர் படாமல் இருக்க தந்தை ஒருவர் குடை பிடித்தபடி நிற்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆன்லைனில் கல்விகற்கும் மகள் மீது மழைநீர் படாமல் இருக்க தந்தை ஒருவர் குடை பிடித்தபடி நிற்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இணையத்தில் வைரலான புகைப்படம் கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்திலுள்ள சல்லியா தாலுகாபலாக்கா கிராமத்தின் சாலையோரத்தில் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தை அங்குள்ள பத்திரிக்கையாளர் மகேஷ் புச்சப்படி என்பவர் எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “10 வகுப்பு படிக்கும் அந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் பங்குகொள்வதற்காக தினமும் 4 மணி அளவில் இந்த இடத்திற்கு வந்து விடுவார். அவர்களுக்கு இது ஒரு வாடிக்கையான விஷயம்தான். அப்போது அங்கு திடிரென அங்கு மழை பெய்ய ஆரம்பித்த நிலையில் மாணவியின் தந்தை சரவணன், தனது மகள் மீது மழைநீர் படாமல் குடையை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அங்கு இது போல பல மாணவர்கள் நல்ல நெட்வொர்க் கிடைக்காமல் இவ்வாறான இடங்களை நாடுகின்றனர்.” என்றார். மாணவியுடன் மற்றொருவராக நிற்பது சரவணனின் மற்றொரு மகள் எனத் தெரிகிறது.
அங்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கு கொள்ளும் மாணவர்கள் அப்பகுதியில் கிடைக்கும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கையே சார்ந்து இருக்கின்றனர். ஆனால் அங்கு அதன் நெட்வொர்க் மிக குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல அங்கு மின் தடை ஏற்படும் போதும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்குகொள்ள முடிவதில்லை. இதனால் அங்குள்ள மாணவர்கள் முறையாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கு கொள்வதில் சிரமம் உண்டாகிறது.
இது குறித்து பி.எஸ்.என்.எல் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அங்குள்ள மாணவர் ஒருவர் கூறும்போது, “ நான் பி.ஏ டிகிரி படித்துக்கொண்டிருக்கிறேன். இங்கு நெட்வொர்க்கே கிடைப்பதில்லை. இணைய வசதி இல்லாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது. எங்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் உள்ளன. இந்த ஊரடங்கு காலங்களில் 30 முதல் 40 மாணவர்கள் இங்கு வந்து வகுப்புகளில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
இதுமழைக்காலம் வேறு. தினமும் 9 மணி முதல் 1 மணி வரை ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுப்போம். 1 மணி நேரம் உணவு இடைவேளை. மீண்டும் 2 மணி அளவில் இங்கு வருவோம். எங்களுக்கு இங்கு தவிர வேறு எந்த இடத்திலும் நெட்வொர்க் கிடைப்பதில்லை. இங்கு பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் உள்ளது. ஆனால் அதன் நெட்வொர்க் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களும் தினமும் இதே சூழ்நிலையைதான் எதிர்கொள்கின்றனர். ஆனால் ஒருபோதும் நாங்கள் கல்வி கற்பதை நிறுத்தவில்லை” என்றார்.