(Source: ECI/ABP News/ABP Majha)
"நான் உயிரோடு இருக்கும் வரை.. அதை அமல்படுத்த விட மாட்டேன்" பாஜகவுக்கு முதலமைச்சர் மம்தா சவால்
உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்தம் சட்டத்தை தேர்தல் விவகாரமாக கையில் எடுத்துள்ளது பாஜக.
சி.ஏ.ஏ எனப்படும் குடியிரிமை திருத்தம் சட்டம் என்றால் என்ன?
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவு செய்தது.
அதன்படி, 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு, மேல்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியிரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் விவகாரமாக கையில் எடுத்த பாஜக:
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டம் ஆனது. ஆனால், இதுவரை அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இன்னும் விதிகள் வகுக்கப்படவில்லை. இதற்கிடையே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தான் உயிரோடு இருக்கும் வரை சட்டத்தை அமல்படுத்த விடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு சவால் விடுத்த மம்தா:
உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்சில் இதுகுறித்து பேசிய அவர், "தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக பாஜக மீண்டும் சிஏஏ விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால், நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் அதைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன்" என்றார்.
எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டைகளை வழங்கி வருவதாக கூறிய மம்தா, "அத்தகைய அட்டைகளை ஏற்று கொள்ள வேண்டாம். பொறியில் சிக்க வைப்பதற்காக இம்மாதிரியான அட்டைகள் வழங்கப்படுகின்றன" என்றார்.
பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுதான் அன்றைய நிலை. ஆனால் 1955-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, இந்த சட்டத்தில்தான், பாஜக அரசு திருத்தம் செய்தது.
அதன்படி, உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.