Mamata Banerjee:”காங்கிரஸே வேண்டாம்”.. புது ரூட் எடுத்த மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ்.. அடுத்த மூவ் இதுதான்
காங்கிரஸ் இன்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
காங்கிரஸ் இன்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
2024 நாடாளுமன்ற தேர்தல்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவை வீழ்த்துவதை இலக்காக கொண்டு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது. திமுகவும் எதிர்க்கட்சிகள் காங்கிரசின் கீழ் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதேநேரம், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைக்க தீவிரம் கட்டி வருகின்றனர்.
மம்தா - அகிலேஷ் கூட்டணி சந்திப்பு:
இந்நிலையில் தான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ் கொல்கத்தாவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை பிரதான எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவரை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொள்ள பாஜக முயல்கிறது. அதை தடுக்கவும், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரே விதமாகவே கருத வேண்டும் எனவும் விவாதித்துள்ளனர்.
நவீன் பட்நாயக் உடன் சந்திப்பு:
காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக வரும் மார்ச் 23ம் தேதி அன்று, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பார் என, திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒன்றும் பிக்பாஸ் கிடையாது. நாங்கள் உருவாக்குவதை மூன்றாவது அணி என கூற முடியாது. அதேநேரம், பாஜகவை வீழ்த்தும் வலிமை மாநில கட்சிகளுக்கு உள்ளது எனவும் அக்கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ் பேச்சு:
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரே விதமாக தான் பார்க்க வேண்டும் என, அகிலேஷ் யாதவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் ”பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பதே தற்போதைய சூழலில் எங்களின் நிலைப்பாடு. மத்திய புலனாய்வு அமைப்புகளால் கைவிடப்பட்ட வழக்குகளை குறிப்பிட்டு, பாஜகவின் ஆதரவை பெறுபவர்கள் சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை குறித்து கவலைப்படுவதில்லை” என்றார். அதேநேரம், மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகம், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைப்பதாகவும் குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார்.