PM Modi: பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து.. சுற்றுலா பயணத்தை ரத்து செய்யும் இந்திய மக்கள்..!
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்
பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அந்நாட்டு சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய அடி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது பயண அனுபவம் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். அதில், ‘லட்சத்தீவு என்பது காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று.
லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் பிரமிக்கிறேன். இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். இந்த பயணத்தில் 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக எவ்வாறு உழைப்பதுஎன்பது குறித்து சிந்திக்க வைக்கும் வாய்ப்பாக அமைந்தது. சாகச வீரர்களைக் காணவும், அவர்களை ஊக்குவிக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கான பயணப் பட்டியலில் லட்சத்தீவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.
அங்கு லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதேசமயம் கடற்கரையில் நடைபயணம், ஸ்கூபா டைவிங் பல செயல்பாடுகளையும் அவர் மேற்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த பயணம் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றிருந்தது.
இதனிடையே பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் குறித்து அந்நாட்டு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழத் தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதேசமயம் மாலத்தீவு அமைச்சர்கள் கருத்துக்கு மாலத்தீவின் முன்னாள் அதிபரான முகமது நஷீத் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு பதவியில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததால் இந்திய மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இது மாலத்தீவு நாட்டின் சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மக்களின் விருப்பமான சுற்றுலா தலமாக மாலத்தீவு உள்ள நிலையில் அங்கு இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட 10,500 ஹோட்டல் அறைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலத்தீவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படக்கூடும் என சொல்லப்படுகிறது.
மேலும் எக்ஸ் வலைத்தள பக்கத்திலும் #BoycottMaldives என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. அமைச்சர்கள் நீக்கம் மட்டுமே பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததுக்கு நடவடிக்கையாக இருக்க முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருவதால் மாலத்தீவு அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறது. இந்த விவகாரம் முடிவுக்கு வரும் பட்சத்தில் மட்டுமே இனி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.