Watch Video: திக்! திக்! வெள்ளமாக ஓடிய மழைநீர்! ராய்காட் மலையில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள்!
மகாராஷ்ட்ராவில் கனமழை பெய்து வரும் சூழலில், ராய்காட் மலையில் சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மகாராஷ்ட்ரா. இங்கு கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை உள்பட பல பகுதிகளில் பேய்மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் 6 மணி நேரத்தில் 30 செ.மீட்டர் மழை பெய்தது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
ராய்காட் மலையில் சிக்கிய பயணிகள்:
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று ராய்காட் மாவட்டம். சத்ரபதி சிவாஜி மராத்தா பேரரசின் தலைநகரமாக ராய்காட் இருந்தது. இதனால், ராய்காட் மலைக்கோட்டை சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். ராய்காட் மலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
ராய்காட் மலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வழக்கம்போல சென்றுள்ளனர். இந்த சூழலில், அங்கு மழை கொட்டி வருவதால் ராய்காட் மலையில் இருந்து கீழே மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
Horrific video from Raigad Fort.. pic.twitter.com/JrnHV9JsRI
— Vivek Gupta (@imvivekgupta) July 8, 2024
ராய்காட் செல்லத் தடை:
ராய்காட் மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் அருகில் இருந்த படிக்கட்டு திண்ணைகளில் பாதுகாப்பாக ஏறி நின்றனர். ராய்காட் மலைக்குச் செல்லும் சித்தாரா தார்வாசா மற்றும் நானே தார்வாசா பாதைகள் பேரிகார்டு மூலம் பாதையை அடைத்துள்ளனர்.
ராய்காட் மலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, அங்கு சிக்கியவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். தற்போது மூடப்பட்டுள்ள ராய்காட் மலைப்பகுதியில் சூழல் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மகாராஷ்ட்ராவில் இன்னும் ஓரிரு தினங்களுக்கு மழை இவ்வாறே பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.