“இரவில் பசியோடு படுத்திருக்கேன்” - பழங்குடியின சிறுவன் டூ அமெரிக்காவில் விஞ்ஞானி: வியக்க வைக்கும் நெகிழ்ச்சி கதை...!
கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு அவரின் வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் குழந்தையாக இருக்கும் போது, ஒரு வேளை உணவை பெறுவது கூட பாஸ்கர் ஹலாமிக்கு கடினமாக இருந்தது. ஆனால், தற்போது அவர் அமெரிக்காவில் மூத்த விஞ்ஞானியாகி உள்ளார்.
கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு அவரின் வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
குர்கேடா தாலுகாவில் உள்ள சிர்ச்சாடி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தில் பிறந்த ஹலாமி, இப்போது அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள உயிர் மருந்து நிறுவனமான சிர்னாமிக்ஸ் இன்க் இன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் மூத்த விஞ்ஞானியாக உள்ளார்.
மரபணு மருந்துகளில் அவர் பணியாற்றி வரும் நிறுவனம் ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அதில், ஆர்என்ஏ உற்பத்தி மற்றும் தொகுப்புகளில் ஹலாமி பணியாற்றி வருகிறார்.
வெற்றிகரமான விஞ்ஞானியாக மாறியுள்ள பாஸ்கர் ஹலாமியின் பயணம் தடைகள் நிறைந்தது. பலவற்றில் முதல்முறையாக சாதித்து காட்டி மற்றவர்களுக்கு உத்வேகமாக மாறியுள்ளார். சிர்ச்சாடி கிராமத்தை சேர்ந்த ஒருவர், அறிவியலில் பட்டம், முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை.
தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து ஹலாமி பேசுகையில், "எனது குழந்தைப் பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளில், எனது குடும்பம் மிகக் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வந்தது. ஒரு வேளை உணவைக் கூட பெறுவதற்கு நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. உணவோ வேலையோ இல்லாமல் எனது குடும்பம் எப்படி வாழ்ந்தது என்று சமீப காலம் வரை என் பெற்றோர் வியந்தனர்.
வருடத்தில் சில மாதங்கள், குறிப்பாக பருவமழை, நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. ஏனெனில், குடும்பம் வைத்திருந்த சிறிய பண்ணையில் பயிர்கள் வளரவில்லை. அதனால், வேலை இல்லை. நாங்கள் மஹுவா பூக்களை சமைத்து சாப்பிட்டோம். ஆனால், அவை சாப்பிட மற்றும் ஜீரணிக்க எளிதானவை அல்ல.
பர்சோட் (காட்டு அரிசி) சேகரித்து அரிசி மாவை தண்ணீரில் (ஆம்பில்) சமைத்து வயிறு நிரம்ப குடிப்போம். இது நாங்கள் மட்டுமல்ல, கிராமத்தின் 90 சதவீதத்தினர் இப்படித்தான் வாழ வேண்டியிருந்தது" என்றார்.
சீர்ச்சாடியில் 400 முதல் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஹலாமியின் பெற்றோர் கிராமத்தில் வீட்டு வேலை செய்து செய்தனர். ஏனெனில் அவர்களின் சிறிய பண்ணையில் விளைந்த விளைச்சல் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.
ஏழாம் வகுப்பு வரை படித்த ஹலாமியின் தந்தை, 100 கி.மீ தொலைவில் உள்ள கசன்சூர் தாலுகாவில் உள்ள ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது. எல்லா போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு அந்த இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு, பணி கிடைத்தவுடன் ஹலாமி குடும்பத்தின் நிலை சற்று நன்றாக மாறியது.
இதுகுறித்து விவரித்த ஹலாமி, "அப்பா, அந்த இடத்தை அடைந்து விட்டாரா என்பது கூட அம்மாவுக்குத் தெரியாமல் இருந்தது. மூன்று நான்கு மாதங்கள் கழித்து எங்கள் கிராமத்துக்குத் திரும்பியபோதுதான் அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியவந்தது. அவர் கசன்சூரில் உள்ள பள்ளியில் சமையல்காரராக வேலைக்குச் சேர்ந்தார்.
பின்னர், நாங்கள் அங்கு மாறினோம். என் தந்தை கல்வியின் மதிப்பை புரிந்துகொண்டு நானும் என் உடன்பிறந்தவர்களும் படிப்பை முடிப்பதில் உறுதியாக இருந்தார்" என்றார்.