‛சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல் இல்லையென்றால் ராஜினாமா செய்வேன்’ அமைச்சர் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!
நடிகை ஹேமமாலினியின் கன்னத்துடன் சாலைகளை ஒப்பிட்டு பேசிய மகாராஷ்டிரா அமைச்சரின் பேச்சால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
நடிகை ஹேமமாலினியின் கன்னத்துடன் சாலைகளை ஒப்பிட்டு பேசிய மகாராஷ்டிரா அமைச்சரின் பேச்சால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதற்கு மாநில மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பின்னர் மன்னிப்பு கேட்டார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாநில குடிநீர் வினியோகம் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சராக இருப்பவர், சிவசேனாவின் மூத்த தலைவர் குலாப்ராவ் பாட்டீல்.
இவர், வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள தனது மாவட்டத்தில் போட்வாட் நகர் பஞ்சாயத்து தேர்தலுக்கான தேர்தல் கூட்டத்தில் உரையாற்றினார். இதில் இவர் தெரிவித்த கருத்துகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது மேலும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அப்போது, எதிர்க்கட்சியினர் தனது தொகுதிக்கு சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
“30 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தவர்கள் எனது தொகுதிக்கு வந்து சாலைகளைப் பார்க்க வேண்டும். ஹேமமாலினியின் கன்னங்கள் போல் இல்லை என்றால் நான் ராஜினாமா செய்வேன். என் ஜலகாவ் தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை ஹேமமாலினியின் கன்னங்கள் போல் வழவழப்பாக உள்ளன” என பாட்டீல் தெரிவித்தார்.
ஜல்கான் தொகுதியில் பல ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த முன்னாள் பாஜக தலைவர் ஏக்நாத் காட்சேவை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன் தலைவர் ருபாலி சஹான்கர் கூறுகையில், ''நடிகையின் கன்னத்துடன் சாலைகளை ஒப்பிட்டு பேசியதற்காக அமைச்சர் பாட்டீல் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் பாட்டீல் மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை. கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் சத்ரபதி சிவாஜி மகாராஜை வணங்கும் சிவசேனாவைச் சேர்ந்தவன். கட்சி நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே, பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
ஹேமமாலினி நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், நடனக் கலைஞர், அரசியல்வாதி என பல்வேறு பரிணாமங்களை கொண்டவர். துவக்க காலத்தில் "கனவுக் கன்னி" என அறிமுகப்படுத்தப்பட்ட ஹேம மாலினி, 1977ல் அதே பெயருள்ள (டிரீம் கேர்ள்) திரைப்படத்தில் நடித்துள்ளார். 2004ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2003 முதல் 2009 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2014இல் மதுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதும் அந்த தொகுதியின் மக்களவை எம்பியாக உள்ளார்.