பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. சகோதரிக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய பாஜக மூத்த தலைவரின் மகன்
பாஜக மூத்த தலைவர் ஒருவரின் மகன், தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது மைனர் சகோதரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்:
இந்த அறிக்கைகளுக்கு எல்லாம் வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் ஒரு அதிர்ச்சி தரவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே குற்ற செயல்களில் ஈடுபடுவது மேலும் அதிர்ச்சியை தருகிறது. நாட்டில் உள்ள 4001 எம்எல்ஏக்களில் 1,136 பேர் அதாவது 28 சதவிகித எம்எல்ஏக்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களின் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுப்பட்டதாக 114 எம்எல்ஏக்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. 14 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து, முக்கிய கட்சிகளை சேர்ந்தவர்களும் இம்மாதிரியான குற்றத்தில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி:
அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அம்மாநில பாஜக மூத்த தலைவர் ஒருவரின் மகன், தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது மைனர் சகோதரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாஜக தலைவரின் மகனை தவிர, மேலும் மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேச உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ராவின் கோட்டையாக தாதியா மாவட்டம் கருதப்படுகிறது. தாதியா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் நரோத்தம் மிஸ்ரா.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரிக்கு பாலியல் தொல்லை:
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், "கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் பாஜக நிர்வாகியின் மகன் ஈடுபட்டதாக காவல்துறை அறிவித்தால் அவருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என பாஜக தாதியா மாவட்ட தலைவர் உறுதி அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உன்னாவ் காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர்கள்.
இதுகுறித்து தாதியா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அனைவருமே மாணவர்கள். இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.