ABP - C Voter Opinion Poll: மத்திய பிரதேசத்தில் வெற்றி கொடி நாட்டுகிறதா காங்கிரஸ்? ஷாக்கான பாஜக
மத்திய பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது.
ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.
இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த 15 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.
பாஜகவின் கோட்டையில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்:
மத்திய பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இச்சூழலில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 118 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, 99 முதல் 111 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 0 முதல் 3 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 0 முதல் 2 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் 44.3 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜக 42.1 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், எந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள் என எழுப்பிய கேள்விக்கு வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
யார் முதலமைச்சராக வர வேண்டும்?
யார் முதலமைச்சராக வர வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு ஆதரவாக 42.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவாக 38 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் நடக்க வேண்டுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, தாங்கள் கோபமாக இருப்பதாகவும் ஆட்சி மாற்றம் நடந்தே தீர வேண்டும் என 55.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசின் மீது கோபமாக இருக்கிறோம், ஆனால், ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 6.1 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசின் மீது கோபம் இல்லை, ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 38.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.