Crime : துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை.. கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம்.. பரபர சம்பவம்.. நடந்தது என்ன?
மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் அரங்கேறிய வங்கி கொள்ளை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாளுக்கு நாள் கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வங்கிகளில் அரங்கேறும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் அரங்கேறிய வங்கி கொள்ளை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பல் வங்கியில் கொள்ளையடித்தி திட்டமிட்டருக்கிறது. அந்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் தங்கக் கடன் அளிக்கும் வங்கியில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும் 3.5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதை, காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. முகமூடி மற்றும் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கியில் இருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிசிஐ செய்தி நிறுவனத்திடம் கட்னி காவல் கண்காணிப்பாளர் எஸ்.கே. ஜெயின் பேசுகையில், "பார்கவான் பகுதியில் அமைந்துள்ள வங்கியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. 4 கோடி முதல் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும் 3.5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்" என்றார்.
8 கோடி மதிப்பிலான 16 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சில தகவல்கள் குறித்துக் கேட்டதற்கு, கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற உலோகத்தின் எடை குறித்து வங்கி அதிகாரிகள் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
"கொள்ளையர்களின் வயது 25 முதல் 30 வயது வரை இருக்கலாம். அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கு எதிராக ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகம் படிக்காதவர்கள். குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
ஏடிஎம் கொள்ளை, நகைக் கடை கொள்ளை, வங்கிகளில் கொள்ளை என அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் அதைத் தடுக்க முயலும் காவலாளிகள், உரிமையாளர்கள் கொல்லப்படுவதும் இந்தியா முழுவதுமே அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, வட மாநிலத்தவர் இச்சம்பவங்கள் அதிகம் ஈடுபடுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அதற்கு ஏற்றார்போல, வட மாநிலத்தவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அங்கும் இங்குமாய நடந்து வருகிறது. ஆனால், வட மாநிலத்தவரே இதில் முற்றிலும் ஈடுபடுவதாக கூறுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. பல இடங்களில், உள்ளூர்வாசிகளே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இருப்பினும், இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.