Madhya Pradesh Election 2023: மத்தியபிரதேசத்தில் முடிவுக்கு வரும் 20 வருட பாஜக ஆட்சி? தேர்தல் முடிவுகளை மாற்றும் பிரச்னைகள்
Madhya Pradesh Election 2023: மத்தியபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க உள்ள, மிக முக்கிய பிரச்னைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Madhya Pradesh Assembly Election 2023: மத்தியபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில், ஆளும் பாஜக தோல்வியை சந்தித்து காங்கிரஸிடம் ஆட்சியை இழக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்தியபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்:
5 மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. அந்த 5 மாநிலங்களில் மிகப்பெரியது மற்றும் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் மத்தியபிரதேசம் மட்டும் தான். 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கமல்நாத் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவிற்கு செல்ல காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து, பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சர் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 230 தொகுதிகளை கொண்டுள்ள மத்தியபிரதேச மாநில சட்டமன்றத்திற்கு, நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் மத்தியபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியபிரதேசத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும், பிரச்னைகள் என்ன என்பதை இங்கு அறியலாம்.
ஊழல் குற்றச்சாட்டுகள்:
பாஜகவின் ஆட்சியில் ஏராளமான ஊழல் நடப்பதாக காங்கிரஸ் தீவிரமாக களமாடி வருகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது ஊழல் தலைவிரித்தாடியதாகவும், மத்தியப் பிரதேசத்தில் அதைவிட மோசமாக இருப்பதாகவும் அக்கட்சி விமர்சித்து வருகிறது. வியாபம் ஆட்சேர்ப்பு ஊழல் உள்ளிட்ட பெரும் நிதி ஊழல்களில் சிவராஜ் சவுகான் அரசு ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
அரசின் மீதான அதிருப்தி:
2018ம் ஆண்டு தொடங்கி சில மாதங்களுக்கு மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், கடந்த 2003ம் ஆண்டு முதல் மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இதனால், தாமாகவே ஆட்சியின் மீது ஒரு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. இது அரசுக்கு எதிரான அதிருப்திகளை நீர்த்துப்போகச் செய்வதையும், முதலமைச்சர் பதவிக்கான புதிய விருப்பங்களை வழங்கும் என்றும் பாஜக கருதுகிறது.
சிந்தியா ஆதரவாளர்களின் நிலைமை:
பாஜகவில் இணைந்த தனது முக்கிய ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்று தருவது, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அவர்களுக்கு வாய்ப்பளிப்பது பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். வாய்ப்பளிக்காவிட்டால் உட்கட்சி பிரச்னையை ஏற்படுத்தக் கூடும்.
குற்றச்சம்பவங்கள்:
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள், பாஜக ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சித்தி மாவட்டத்தில் பழங்குடியினரை அவமானப்படுத்திய சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முதலமைச்சரே மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள்:
வேளாண்துறை சார்ந்த பிரச்னைகள் என்பது மத்தியபிரதேசத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, தரமான விதைகள் மற்றும் உரங்கள் கிடைப்பது உள்ளிட்ட விவசாயிகளின் கவலைகளை, ஆளும் கட்சி புறக்கணிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
வேலையின்மை:
இளைஞர்களிடையே அதிக வேலையின்மை விகிதம் பாஜகவிற்கு எதிரான முக்கிய பிரச்சினையாக உள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதே நேரத்தில், திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பதோடு, வேலையற்ற இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
கல்வி & சுகாதாரம்:
மாநிலத்தின் கிராமப்புறங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், தகுதியான ஆசிரியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது. தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய பணியாளர்கள், குறிப்பாக மருத்துவர்கள் இல்லை. கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மோசமாக உள்ளன என்பது காங்கிரசின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
காங்கிரஸ் வாக்குறுதி:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பட்டியலின, பழங்குடியினர் மற்றும் ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையும், மத்தியபிரதேச காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது. அதேநேரம், மூத்த தலைவர்களான கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் இடையே நிலவும் உட்கட்சி பூசலே காங்கிரசின் முக்கிய பிரச்னையாகவும் உள்ளது.
பாஜக நலத்திட்டங்கள் & சிவராஜ் சிங் சவுகான்:
அரசின் மிதான எதிர்ப்பை போக்க பாஜக பல்வேறு நலத்திட்டங்களை கடந்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் வாக்குகளை குறிவைத்து பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதில், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35 சதவிகித இடஒதுக்கீடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம், கமல்நாத்தை முதலமைச்சர் முகமாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், பாஜக தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த 16 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் மீது நிலவும் அதிருப்தி தான் காரணமாக கருதப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.