வீடு வாடகைக்கு வேணுமா? ’Linked In ப்ரோஃபைல், ரைட்டப் அனுப்புங்க!’ - பெங்களூர்வாசியின் உரையாடல் வைரல்!
வீடு வாடகைக்கு கேட்க சென்றவர்களிடம் Linked In ப்ரோஃபைல் கேட்ட கதை சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
மார்டன், நவீன வளர்ச்சி என்று என்னதான் பேசினாலும், சில விஷயங்கள் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கதான் செய்கின்றன. கனவுகளைத் துரத்த நகரங்களுக்கு குடியேறுவது என்பது சற்று கடினமான பயணம் என்று சொல்லலாம். வாடகை வீடு கிடைப்பது எளிதான ஒன்றல்ல. வீடு தேடி அலைவது குறித்து நாவல் எழுதும் அளவிற்கு கதைகள் இருக்கும். வீட்டு உரிமையாளர்களுக்கு பதில் சொல்வதற்கே பெரும் போராட்டமாகிவிடும். கேள்விகள் லிஸ்ட் நீளும். சொந்தமாக வீடு வாங்கும்போது கூட இவ்வளவையும் சந்திக்க வேண்டியிருக்காதுப்பா என்றே தோன்றிவிடும்.
மதம்,சாதி,பொருளாதார ரீதியிலான கேள்விகள் பெரும்பாலும் இடம்பெறும். அதோடு, வாடகை வீடு தேடிப் போனால்,அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ..அய்யோ வீடே வேண்டாம்டா சாமி.. என்றாகிவிடும்.இப்படி சொல்ல வைக்கும் அளவிற்கு பெங்களூருவில் நிலைமை உள்ளது என்று சமூக வலைதளங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் தொழில்நுட்ப நகரம், ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள நகரம், மெட்ரோ சிட்டி- இப்படி பல புகழ்பெற்ற பெங்களூருவில் வீடு வாடகைக்கு கேட்க சென்றவர்களிடம் Linked In ப்ரோஃபைல் கேட்ட கதை சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. என்னடா, வீடுதான கேட்டேன்; வேலைக்குக் கூட இவ்வளவு கேள்விகள் கேட்க மாட்டாங்களே என்ற வகையில் பலரும் தங்களது மன வேதனைகள் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூருவில் இந்திரா நகர் பகுதியில் கெளவுதம் என்பவர் வீடு தேடியுள்ளார். தனியே, இடைத்தரகர் என்று இரண்டு வகையிலும் அவர் வீடு தேடியுள்ளார்.
இதில் இடைத்தரகர் ஒருவர் வீடு வாடகைக்கு இருப்பதாக கூறியுள்ளார். உடனே, கெளவுதம் மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார். ஆனால், அவரோ கெளவுதமிடம் வாட்ஸ் அப் மெசேஜில் ’உங்கள் சமூக ஊடக ப்ரோபைலை அனுப்புங்கள்; Linked In- லிங்க் அனுப்புங்க’ என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் கெளவுதம் அதிச்சியாகியுள்ளார். வேலைக்கா விண்ணப்பிக்கிறோம்; வீடுதானே கேட்டோம் வாடைகைக்கு என்று சூழலை விசித்தரமாக நினைத்துள்ளார்.
அப்போதுதான் கெளவுதமிற்கு புரிந்திருக்கிறது. அங்குள்ள வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வீடு கேட்டு வருவோரிடம், அவர்களின் சமூக ஊடக ப்ரொபைல், எங்கு வேலைப் பார்க்கிறார், என்ன சம்பளம், யாரெல்லாம் குடும்ப உறுப்பினர்கள், பணி அனுபவ விவரங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.
வீட்டு உரிமையாளருக்கு கெளவுதம் லிங்கட் இன் ப்ரோஃபைலை அனுப்பியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல்,உங்களை பற்றிய விவரங்களை ரைட்டப்பாக எழுத முடியுமா என்று கேட்டுள்ளார். இந்த உரையாடலை கெளவுதம் தனது சமூக வலைதளத்தில் பகிந்துள்ளார். 12-வது நாளாக இப்படிதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது வீடு தேடும் பயணம் என்று குறிப்பிட்டு..
இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். முறையாக வாடகை கொடுக்க தயாராக இருந்தாலும், பெங்களூருவில் வீடு கொடுக்க யாரும் தயாராக இல்லை. பலரும் எக்கச்சக்க கேள்விகளைக் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளனர், என்று ஒருவர் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.