India On Iran: உரசிய ஈரான், திருப்பி கொடுத்த இந்தியா - ”வரலாற புரட்டிப் பாருங்க” என்ற பதிலடிக்கான காரணம் என்ன?
India On Iran: இந்திய சிறுபான்மையினர் தொடர்பான ஈரானின் கருத்துக்கு, மத்திய அரசு பதிலடி தந்துள்ளது.
India On Iran: இந்திய சிறுபான்மையினர் தொடர்பாக பேசும் ஈரான், முதலில் தங்கள் வரலாற்றை கவனிக்க வேண்டும் என மத்திய அரசு பதிலடி தந்துள்ளது.
ஈரான் தலைவர் பேச்சு:
இந்திய இஸ்லாமியர்கள் குறித்த ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியா கூறியுள்ளது. முகமது நபியின் பிறந்தநாள் அன்று ஈரான் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய இஸ்லாமியர்களை காஸாவில் உள்ளவர்களுடன் ஒப்பிடு செய்து, அவர்கள் பல துன்பங்களை எதிர்கொள்வதாக குறிப்ப்ட்டு இருந்தார். அந்த பதிவில், “மியான்மர், காஸா, இந்தியா அல்லது வேறு எதிலும் ஒரு இஸ்லாமியர் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால், நம்மை இஸ்லாமியர்களாக கருத முடியாது. இஸ்லாமிய உம்மா என்ற பகிரப்பட்ட அடையாளத்தைப் பற்றி இஸ்லாத்தின் எதிரிகள் எப்போதுமே நம்மை அலட்சியப்படுத்த முயற்சிக்கின்றனர்” எனவும் ஈரான் தலைவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஈரான் தலைவருக்கு இந்தியா பதிலடி:
ஈரான் தலைவரின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்து ஈரான் தலைவர் தெரிவித்த கருத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இவை தவறான தகவல் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள் மற்றவர்களைப் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கும் முன் தங்கள் சொந்த பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்” என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா - ஈரான் உறவு:
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பகை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்கிறது. 80 சதவீத எண்ணெய் மேற்கு ஆசியாவில் இருந்து வருகிறது என்றால், இஸ்ரேலுடனான உறவு பாதுகாப்பு மற்றும் ராணுவ அடிப்படையில் உருவாகி வருகிறது.
மேற்கு ஆசியாவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈரான் முதன்மையான நாடாக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாத மற்றும் சபஹர் துறைமுக அச்சுறுத்தல்களையும் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் போது இரு நாடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவை இஸ்ரேலையும் பிணைப்பதும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தான். இதன் காரணமாகவே கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தீவிரவாத தாக்குதலின் ஆரம்பகட்டத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவளித்தது.