HBD Periyar: தமிழ்நாட்டின் ஒளி - சனாதன எதிர்ப்பு, சமூக சீர்திருத்தத்தை தூக்கிப்பிடித்த பெரியார் பிறந்தநாள்..
HBD Periyar: பெரியார் என போற்றப்படும் ஈ.வெ.ரா.வின் 146வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
HBD Periyar: பெரியார் பிறந்தநாள் தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது.
பெரியாரின் 146வது பிறந்தநாள்:
வாழ்ந்த காலம் கடந்தும் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றை பெயர்தான் பெரியார். சமத்துவம், சமூகநீதி போன்ற மனிதகுலத்தின் மிக அத்தியாவசியமான கொள்கைகளுக்காக, குரல் கொடுத்து மிக முக்கிய சீர்திருத்தங்களுக்கான காரணமாக திகழ்கிறார். இந்தியாவ்ன் பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பெண் கல்வி, பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் வளர்ச்சி போன்றவற்றில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ காரணமும் பெரியார் விதைத்த மாற்றங்கள் தான. சாதி, மதம் எனும் பெயரால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது, கடவுள் தான் அப்படி படைத்தார் என கூறினால் அவர் கடவுளே கிடையாது என கடவுள் மறுப்பை முன்னெடுத்த பெரியாரின் 146வது பிறந்த நாள் இன்று. இதனை, தமிழக அரசு சமூகநீதி நாளாக கொண்டாடி வருகிறது.
சனாதனத்தை சாடிய பெரியார்:
இந்து மதத்தின் அடிப்படையான சாதியம், பாகுபாடு கற்பிக்கும் விதமாக உள்ளது என்றும் அடக்குமுறைகளை சமூக கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாற்றுகிறது என்றும் பெரியார் விமர்சித்தார். அநீதி மற்றும் சமத்துவமின்மையின் ஆதாரமாக இருக்கும் சாதியத்தை போதிப்பதாக சனாதன தர்மத்தை தீவிரமாக எதிர்த்தார். சமூக படிநிலையில் கீழ் இருக்கும் சாதிகளை சுரண்டுவதற்கு சனாதன தர்மம் என்ற கோட்பாட்டை பிராமணர்கள் பயன்படுத்துவதாகவும் பெரியார் குற்றஞ்சாட்டினார்.
சாதிய கட்டமைப்பை நியாயப்படுத்தவும் சமூக படிநிலையில் கீழ் உள்ள சாதி மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே கர்மா, மறுபிறவி, வர்ணம், தர்மம், மோட்சம் ஆகிய கோட்பாடுகள் நிலைநிறுத்தப்படுவதாகவும் பெரியார் வாதிட்டார். இதன் காரணமாகவே, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், மனுஸ்மிருதி போன்றவற்றை பெரியார் கடுமையாக எதிர்த்தார். பாகுபாட்டை போதிக்கும் நோக்கில் மனிதர்களே இவை அனைத்தையும் எழுதியதாகக் கூறினார்.
இடஒதுக்கீடு கோரிக்கை:
பெரியாரின் சனாதன எதிர்ப்பு அறிவுசார்ந்து மட்டும் இயங்கவில்லை. அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் எதிர்த்தார். கல்வி, அரசு நிர்வாகம், ஊடகம், இலக்கியம், கலை, மொழி என அனைத்திலும் பிராமன ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த அவர், அனைவருக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நோக்கத்திற்காக சமூக நிலையில் கீழ் இருக்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம், கல்வி மற்றும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சாதிய பாகுபாடு, தீண்டாமை, குழந்தை திருமணம், வரதட்சணை முறை, கைம்பெண் திருமணம், பலதார மணம், மூடநம்பிக்கை உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாலின சமத்துவம், பெண் கல்வி, சாதி மறுப்பு திருமணம், குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றை ஆதரித்து பேசினார்.
சமூக சீர்திருத்தவாதி:
பெண்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய முடியாது, கல்வி கற்க முடியாது, சொத்து சேர்க்க முடியாது, சுயமரியாதையுடன் வாழ முடியாது, தாழ்த்தப்பட்டவர்கள் விரும்பிய உடையை அணிய முடியாது, தலைநிமிர்ந்து நடக்க முடியாது. காலில் செருப்பு அணிய முடியாது என்பன போன்ற மோசமான அடாவடித்தனத்தை தகர்த்தெறிந்தவர். தமிழ்நாடு அரசின் இரு மொழிக் கொள்கையை தனது விழிப்புணர்வு பிரச்சார மேடைகளில் முன்னெடுத்தவர்.
தமிழ்நாடு அரசுக்கு முன்னதாகவே சாதி மறுப்பு திருமணத்தை நடத்தியவர், என ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாற்றத்திற்கான காரணியாக திகழ்ந்தவர் பெரியார். ஒரு தலைமுறைக்கான மாற்றத்தை கொண்டு வருபவரை டார்ச் பியரர் என குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ் சமூகத்திற்கான டார்ச் பியரராக திகழும் பெரியாரின் கொள்கைகள், இன்னும் பல தசாபதங்கள் கடந்தும் தமிழ் மண்ணில் மட்டுமின்றி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஒவ்வொரு போராட்ட களத்திலும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.