Gudi Padwa: மராட்டிய மற்றும் கொங்கனி மக்களால் கொண்டாடப்படும் குடி பட்வா.. பிரதான உணவுகள் என்ன?
மராட்டிய மற்றும் கொங்கனி மக்களால் கொண்டாடப்படும் குடி பட்வா பண்டிகையில் முக்கிய உணவு வகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மராட்டிய மற்றும் கொங்கனி மக்கள் குடி பட்வா கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இது மராத்தி புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வசந்த விழாவாகும். சம்வத்சர் பட்வோ என்றும் அழைக்கப்படும் குடி பட்வா இந்து நாட்காட்டியின்படி சைத்ரா மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு மிகவும் ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதே நாளை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பதால் அனைவரும் குடும்பத்தினருடன் புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவார்கள். புத்தாண்டு அன்று புதிய பொருட்கள் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.
நாடு முழுவதும் வெவ்வேரு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி, உகாதி, பிள்ளையார் சதுர்த்தி ஆகிய பண்டிகைகளுக்கு அந்த பண்டிகைக்கு ஏற்ற உணவுகள் இருக்கும். அந்த வகையில் இந்த குடி பட்வா பண்டிகைக்கும் அதற்கேற்ற உணவுகள் தயார் செய்யப்படும்.
பருப்பு போலி:
இந்த பண்டிகையின் முக்கிய உணவே பருப்பு போலி தான். பருப்பு போலி என்பது மராட்டிய மக்களின் பிரதான உணவாகும். மைதா மாவு ரொட்டியில் கடலை பருப்பு பூரனம் வைத்து தயார் செய்யப்படும்.
கொதிம்பீர் வடி:
பருப்பு போலியை போலவே கொதிம்பீர் வடி என்பது மராட்டியர்களின் பிரதான உணவாகும். இது மிகவும் ருசிகரமான ஒரு தின்பண்டமாகும். கடலை மாவில், கருவேப்பிலை, கொத்தமல்லி, வேர்கடலை, எள்ளு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு உணவாகும்.
ஸ்ரீகந்த்:
ஒரு நல்ல உணவுக்கு பின் இனிப்பு சாப்பிட்டால் அந்த நாளே நிறைவாக இருக்கும். அந்த வகையில் ஸ்ரீகந்த என்ற உணவு மிகவும் சுவைமிக்கதாக இருக்கும். தயிர் மற்றும் குங்கும பூ பால் பயன்படுத்தி தயார் செய்யப்படும்.
பாகர்வாடி:
பாகர்வாடி என்பது மேற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான தின்பண்டமாகும். இதில் இனிப்பு, உப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் கலந்து இருக்கும். முறுக்கு அதிரசம் போல் எண்ணெயில் சுட்டெடுக்கும் தின்பண்டமாகும் இது. இதனை ஒருமுறை சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றும்.
பாசுந்தி:
பாசுந்தி என்றால் எல்லோருக்கும் தெரியும். பாசுந்தி விரும்பாத நபர்கள் யாரேனும் இருப்பார்களா என்றால் அது சந்தேகம் தான். பால் நன்றாக சுண்டி வர, அதிலிருந்து வரும் ஆடை மற்றும் குங்கும பூ பால், உளர் பழங்கள், சர்க்கரை கலந்து செய்யப்படும். இது சாப்பிட்ட பின் கூட நாவில் இதன் சுவை ஒட்டி இருக்கும், அவ்வளவு ருசியாக இருக்கும்.