Karnataka Election: "ஓட்டுபோட வாங்க.. ஓசியில சாப்பிட்டு போங்க.." ஆஃபர் கொடுத்த ஹோட்டல்..! கர்நாடகாவில் நடந்தது என்ன?
கர்நாடகாவில் வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக இலவச உணவு என்று அறிவித்த உணவகங்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த ஒரே மாநிலமாக கர்நாடக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பரப்புரை ஓய்ந்தது. இந்த நிலையில், பெங்களூரில் வாக்குப்பதிவு செய்ய வரும் வாக்காளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு இலவசம் என்று அறிவித்த இரண்டு உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் அறிவிப்பு:
பெங்களூரில் சட்டசபை தேர்தல்களில் வாக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, வாக்காளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் வாக்கு செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு உணவகங்கள் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அங்குள்ள நிசரக்ரா கிராண்ட் உணவகத்தின் உரிமையாளர் வாக்காளர்களுக்கு நெய்தோசை, மைசூர் பாகு, குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்றும், முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 பேருக்கு திரைப்படத்திற்கு டிக்கெட் வழங்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். வரைப் போலவே சாலுக்யா சாம்ராட் காஃபே என்ற உணவகத்தின் உரிமையாளர் வாக்குப்பதிவு தினமான மே 10 (நாளை) காலை 7.30 மணி முதல் காலை 11.30 மணி வரை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இலவச காலை உணவு என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.
வாக்கு சதவீதம் சரிவு:
அரசியலமைப்புச் சட்டப்படி வாக்குப்பதிவிற்காக இலவசமாக எந்தவொரு பொருளையும் இலவசமாக விநியோகம் செய்வது தவறாகும். மேலும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வழிவகுத்துள்ளது. இதையடுத்து, பெங்களூர் மாநகர தேர்தல் அலுவலர் துஷார் கிரிநாத் வெளியிட்ட அறிவிப்பில், உணவு மற்றும் குடிநீர் இலவசமாக விநியோகிப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும். உணவக உரிமையாளர்களை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பெங்களூர் மாநகராட்சியில் கடந்த 2013ம் ஆண்டு 62.03 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். 2018ம் ஆண்டு 55 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.