ஒரே நேரத்தில் அரசுப் பணி...தாயும் மகனும் அசத்தல்...வெற்றிக்கு காரணம் என்ன?
கேரளாவில் பெண் ஒருவரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் அரசு பணியில் சேரவிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் பெண் ஒருவரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் அரசு பணியில் சேரவிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிந்து தனது மகன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரை படிக்க ஊக்குவிப்பதற்காக புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்.
ஆனால் அது அவரை கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (PSC) தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் தூண்டியது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், பிந்துவும் அவரது மகனும் ஒன்றாக அரசுப் பணியில் சேர உள்ளனர். 42 வயதான பிந்து லாஸ்ட் கிரேடு சர்வண்ட்ஸ் (எல்ஜிஎஸ்) தேர்வில் 92ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றாலும், அவரது 24 வயது மகன் லோயர் டிவிஷனல் கிளார்க் (எல்டிசி) தேர்வில் 38வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றது பெருமை அளிப்பதாக பிந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தனது மகனைப் படிக்கத் தூண்டுவதற்காக படிக்க தொடங்கிய அவர், பின்னர் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். தனது மகன் பட்டப்படிப்பு முடித்த பிறகு அதே பயிற்சி மையத்தில் அவரை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இரண்டு முறை எல்ஜிஎஸ் தேர்வையும் ஒரு முறை என்டிசி தேர்வையும் எழுதிய பிறகு நான்காவது முறையாக வெற்றிபெற்றேன். உண்மையான இலக்கு ICDS (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மேற்பார்வையாளர் தேர்வு). LGS தேர்வில் தேர்ச்சி பெற்றதை போனஸாகவே பார்கிறேன்" என்றார்.
அங்கன்வாடியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வரும் பிந்து, "பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் எனது மகன் ஊக்கம் அளித்தனர். ஆதரவாக இருந்தனர். PSC தேர்வில் தேர்ச்சி பெற மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டேன்.
இதுகுறித்து பிந்துவின் மகன் கூறுகையில், "இருவரும் ஒன்றாகப் படிக்காத நிலையில், சில விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். நான் தனியாக படிப்பதையே விரும்புகிறேன். மேலும், அவர் எப்போதும் படிப்பதில்லை. நேரம் கிடைக்கும்போதும், அங்கன்வாடிப் பணிகளுக்குப் பிறகும் படிப்பார். நான் முன்பு ஒரு போலீஸ் தேர்வை எழுதியிருந்தேன். துணைப் பட்டியலிலும் எனது பெயர் வந்தது. இம்முறை எல்.டி.சி தேர்வுக்கு அதிகம் படித்தேன்" என்றார்.
தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விவரித்த பிந்து, "PSC தேர்வுக்கு தயாராகுபவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நான் சிறந்த உதாரணம். அதாவது நான் தொடர்ந்து படிப்பதில்லை. தேர்வுத் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குத் தயாராகிவிடுகிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த சுற்று தேர்வுகள் அறிவிக்கப்படும். அது வரை நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்