Kerala: திடீரென பின்னோக்கி சென்ற ரயில்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..! என்ன ஆச்சு..?
கேரளாவில் ஒரு ரயில் 700 மீட்டர் பின்னோக்கி சென்று, நிற்காமல் சென்ற ரயில்நிலையத்திற்கு மீண்டும் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஒரு ரயில் 700 மீட்டர் பின்னோக்கி இயங்கி தவறவிட்ட ஸ்டேஷனுக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னோக்கி சென்ற ரயில்:
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் ஷோரனூர் செல்லும் வேணாடு விரைவு ரயிலின் லோகோ பைலட் செரியநாடு என்ற சிறிய ரயில் நிலையத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகே, ஸ்டேஷனை தவறவிட்டத்தை உணர்ந்த லோகோ பைலட், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை ஏற்றி செல்வதற்காக ரயிலை கிட்டதட்ட 700 மீட்டர் தூரம் வரை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதனால் ரயிலுக்குள் இருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவமானது கேரளாவில் உள்ள மற்றும் செங்கனூர் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நிறுத்தமான செரியநாடு ஸ்டேஷனில் காலை 7.45 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய ரயில்வேதுறை அதிகாரிகள், “ பயணிகள் யாரும் எந்தவொரு சிரமத்திற்கும் ஆளாகவில்லை காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து யாரும் புகாரும் தெரிவிக்கவில்லை. சரியாக ரயில் குறித்த நேரத்திற்கு சென்றது. செரியநாடு ஸ்டேஷனில் சிக்னல் அல்லது ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாததால், லோகோ பைலட் தவறாக கருதி ரயிலை நிறுத்தாமல் சென்றிருக்கலாம். இருப்பினும் லோகோ பைலட்டுகளிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்:
இதேபோல், கடந்த மே 1ம் தேதி மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சரக்கு ரயில் திடீரென பின்னோக்கி ஓடி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இரண்டு பேர் காயமடைந்தனர். மேலும், அதில் ஒருவர் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள தனது இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் மே 1ம் தேதி இரவு கொரடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொக்காரா பகுதியில் நடந்தது.
இதுகுறித்து காவல்துறையினர், சரக்கு ரயில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பின்னோக்கி சென்றது. அப்போது தண்டவாளத்தை கடந்து சென்ற கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதியது. இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு கார் மோதி எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து, சரக்கு ரயிலில் லோகோ பைலட் மற்றும் பணியில் இருந்த ரயில்வே கிராசிங் ஊழியர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.